திருப்பதி வேங்கடாஜலபதி கோயிலுக்கு பலமுறை சென்றவர்களுக்குக் கூட ஏன் பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் சாத்துகிறார்கள் என்ற விவரம் தெரியுமா என்பது சந்தேகமே. திருப்பதி பெருமாளின் தாடையில் சாத்தப்படும் பச்சை கற்பூரத்துக்கு ஒரு புராணக் கதை உள்ளது. அதை இந்தப் பதிவில் காண்போம்.
அனந்தாழ்வார் என்பவர் சிறந்த பெருமாள் பக்தர். அதுமட்டுமின்றி, ராமானுஜரின் சீடரும் கூட. அவர் தனது குருவின் கட்டளைக்கிணங்க, திருமலையில் தங்கி பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்ய சேவை செய்ய பூந்தோட்டம் ஒன்றை அமைக்க, தனது கர்ப்பிணி மனைவியோடு திருமலையில் குளம் ஒன்றை வெட்டுவதற்குத் தொடங்கினார்.
தனது பக்தனுக்கு அருள் செய்ய நினைத்த பெருமாள், ஒரு சிறுவன் வடிவில் அனந்தாழ்வாரிடம் சென்று, 'நானும் உங்களுக்கு உதவி செய்யலாமா?' என்று கேட்கிறார். ஆனால், அனந்தாழ்வார் அதை மறுத்துவிடுகிறார். பெருமாளுக்கு தான் மட்டுமே சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் வேண்டாம் என்று கூறி விடுகிறார்.
இருப்பினும் அனந்தாழ்வாருக்கு தெரியாமல் அவருடைய கர்ப்பிணி மனைவிக்கு உதவி செய்கிறான் அந்தச் சிறுவன். மண்ணை சீக்கிரமாக மனைவி கொட்டிவிட்டு வருவது அனந்தாழ்வாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, அந்தச் சிறுவன் தனது மனைவிக்கு உதவுவதைப் பார்த்து விடுகிறார். இதைக் கண்ட அனந்தாழ்வாருக்கு மிகுந்த கோபம் வந்து விடுகிறது. அந்த சிறுவனை தனது கையிலிருந்த கடப்பாரையால் தாக்குகிறார். இதனால் சிறுவனின் தாடையிலிருந்து இரத்தம் வழிய ஆரம்பிக்கிறது. அந்தச் சிறுவனும் அங்கிருந்து ஓடி மறைந்து விடுகிறான்.
மறுநாள் காலை அர்ச்சகர்கள் பெருமாளுக்கு பூஜை செய்ய கதவை திறந்தபோது அலறுகிறார்கள். ஏனெனில், திருப்பதி ஏழுமலையான் தாடையிலிருந்தும் இரத்தம் வடிந்துக் கொண்டிருக்கிறது. அப்போது, ‘அர்ச்சகரே! பயப்பட வேண்டாம். அனந்தாழ்வாரை இங்கே அழைத்து வாருங்கள்’ என்று அசரீரி கேட்கிறது.
அனந்தாழ்வார் கோயிலுக்குப் போகிறார். அங்கே பெருமாளின் தாடையிலிருந்து இரத்தம் வருவதை பார்த்துவிட்டு, தனக்கு உதவி செய்ய வந்த சிறுவன் சாட்சாத் பெருமாள்தான் என்பதை உணர்கிறார். இதனால் மிகவும் வருத்தப்பட்டு மனமுருக வேண்டி அங்கிருந்த பச்சைக் கற்பூரத்தை பெருமாளின் தாடையில் வைக்கிறார். உடனே பெருமாள் தாடையிலிருந்து வழிந்த இரத்தம் நின்றுவிடுகிறது. இதை நினைவுப்படுத்தும் விதமாகத்தான் இன்றும் திருப்பதி பெருமாளின் தாடையில் பச்சைக்கற்பூரம் சாத்தப்படுகிறது.
இன்றும் திருப்பதி பெருமாள் கோயிலில் அனந்தாழ்வார் பயன்படுத்திய கடப்பாரையை காணலாம். பெருமாளை தரிசிக்கப் போகும்பொழுது பிரதான வாசலின் நுழைவாயிலின் வலப்புறத்தில் இந்த கடப்பாரை வைக்கப்பட்டுள்ளது. அனந்தாழ்வார் தோண்டிய குளம், ‘அனந்தாழ்வார் குள’ம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.