

தெலுங்கு சினிமாக்களில் இந்த ஒரு கோயில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த கோயிலில் ஒரு காட்சி வைத்தால் போதும், படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்ற நம்பிக்கை டோலிவுட்டில் உள்ளது. இது மட்டுமல்லாது இந்த கோயிலில்தான் திரைப்படத்தின் பூஜையை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் போன்றோர் செய்கின்றனர்.
சினிமாத்துறையினர் எப்போதும் ராசி, அதிர்ஷ்டம், செண்டிமெண்ட் போன்றவற்றில் அதிக ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதன் காரணமாக வெற்றியை தரும் இந்த கோயில் மீது திரைத்துறையினர் அதிக பக்தியுடன் இருக்கின்றனர். சிறப்பு வாய்ந்த இந்த சினிமா கோயில், ஹைதராபாத் அருகேயுள்ள அம்மாபள்ளி என்ற கிராமத்தில் உள்ளது.
அம்மா என்றழைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கனவில் மஹாவிஷ்ணு தோன்றி, இந்த இடத்தில் தனக்கு ஒரு கோயில் கட்டும்படி கேட்டதால், இந்தக் கோயில் முதன் முதலில் கட்டப்பட்டுள்ளது. அந்த அம்மாவின் பெயரால் இந்த ஊரும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் புராணங்களின்படி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
இந்த கோயிலை 12ம் நூற்றாண்டில் கீழை சாளுக்கிய மன்னர்கள் பெரிய முயற்சி எடுத்து கட்டியுள்ளனர். பின்வரும் காலங்களில் இந்த பகுதியை ஆண்ட பல குறுநில மன்னர்களால், கோயிலும் அதன் சுற்றியுள்ள பிரகாரங்களும் மேம்படுத்தப்பட்டன. தற்போது இந்த கோவிலில் காணப்படும் பெரிய கோபுரங்கள் மற்றும் பெரிய மதில் சுவர்கள் அனைத்தும் 17ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டவையாக இருக்கின்றன.
வட இந்திய மற்றும் தென்னிந்திய பாணியில் கோவிலின் கட்டுமானம் அமைந்துள்ளது. மிகவும் அழகான கோயிலின் ராஜகோபுரம் ஏழுநிலையுடன் மிகவும் உயர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுரத்தின் ஒவ்வொரு நிலையிலும் காண்பவர்களை கவரும் வகையில், விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள் மிகவும் நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்டுள்ளன. கோயில் கோபுரத்தின் ஒரு பகுதியில் மகாவிஷ்ணு அனந்த சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கோயிலின் உள்ளே நுழையும் இடத்தில் பெரிய முகப்பு மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த மண்டபத்தின் உள்ள ஒவ்வொரு தூண்களிலும் மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்த, அழகிய சிற்ப வேலைப் பாடுகள் ஏராளமாக உள்ளன. கோயில் பிரகாரம் 9 ஏக்கர் பரப்பளவில் மிகவும் விஸ்தாரமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அதிக பரப்பளவு காரணமாக சினிமா ஷூட்டிங் எடுக்க, இயல்பாகவே, படப்பிடிப்பு குழுவிற்கு வசதியாக உள்ளது.
இங்குள்ள பழமையான சிற்பங்கள் நிறைந்த சுவர்கள் காட்சிகளுக்கு அழகூட்டுவதாக இருக்கின்றன. கோயில் கருவறையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட சீதா ராமச்சந்திர சுவாமி சிலை அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பு அஞ்சனை புத்திரன் அனுமன், வழக்கமாக கருவறையில் ராமரின் பாதங்களுக்கு அருகில் வீற்றிருப்பார்.
ஆனால், இங்கு கோயில் கொடிமரத்தின் அருகே உள்ளே சந்நிதியில் இருக்கிறார். ஶ்ரீ ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் செய்த போது இந்த இடத்தில் தங்கியுள்ளனர். அப்போது அனுமனை அவர்கள் சந்திக்கவில்லை என்பதால் கருவறையில் அவரது சிற்பம் இல்லை.
2001 ஆம் ஆண்டில் மகேஷ் பாபு நடித்த 'முராரி' என்ற திரைப்படம் மெகா ஹிட் ஆன பின் இந்தக்கோயில், தெலுங்கு திரையுலகின் ஹிட் செண்டிமெண்டாக மாறியது. பிறகு சைந்தவி, நிந்தா ஆகிய படங்களும் படமாக்கப்பட்டன. தற்போது கோயிலில் திருமணம் செய்வது, திருமணப் புகைப்படம் எடுப்பது போன்றவை சீதாராமரின் ஆசிபெறுவதாக கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு செல்ல ஹைதராபாத் வரை விமானம் அல்லது ரயிலில் செல்லலாம். அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் கோயிலை அடையலாம்.