இறைவி துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களில் ஒன்றான வைஷ்ணோ தேவியின் கோவில் ஜம்முவில் காத்ரா பகுதியில் அமைந்துள்ளது. திரிகூட மலைமீது அமைந்துள்ள இக் கோவிலை சென்றடைய, பக்தர்கள், அடிவாரத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தை 3000 க்கும் மேற்பட்ட படிகளில் ஏறி கடக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செல்வதால் பக்தர்களின் ஆன்ம பலம் அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியமும் மேன்மையடைகிறது. அது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. மலை உச்சியை நோக்கி பக்திப் பரவசத்துடன் ஏறும்போது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. அதுவே இதயத்திற்கு ஒரு சிறந்த பயிற்சியாகி இதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியத்தை பலமடைய உதவுகிறது.
2. செங்குத்தான மலைப் படிகளில் கால்களை நீட்டியும் மடக்கியும், உயர்த்தியும், ஏறும்போதும் இறங்கும்போதும் முழங்கால், தொடை போன்ற கீழ் உடல் பகுதியில் உள்ள தசைகள் வலுவும் சகிப்புத்தன்மையும் பெறும். இதனால் கீழ் உடல் தசைப் பருமன் பெருகி உடலின் சமநிலை மேம்படும்.
3. தொடர் முயற்சியுடன் முடிந்த அளவு வேகத்தில் உயரத்தை நோக்கி ஏறும்போது நுரையீரல் நன்கு விரிவடையும். இதனால் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். சுவாசப் பாதையும் கோளாறின்றி வேலை செய்யும்.
4. நீண்ட தூரம் மலைப்பாதையில் ஏறும்போது மணிக்கு 500-700 கலோரிகள் எரிக்கப்பட்டு மெட்டபாலிச ரேட் அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலுக்குக் கிடைக்கும் சக்தியின் அளவும் அதிகமாகிறது.
5. குளிர் காற்று, லேசான மழை, ஈரப்பதமான வானிலை போன்ற வித விதமான சூழல்களில் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும்போது, உடல் தானாகவே உஷ்ணத்தின் அளவை சமநிலைப்படுத்தி, எந்த சூழலையும் எதிர் கொள்ளும் வலிமையைப் பெற்றுக்கொள்கிறது.
6. படியேறி செல்லும்போது, உடல் உழைக்க வேண்டிய நிலையேற்படுகிறது. இதனால் என்டார்ஃபின் என்ற ஹார்மோன் சுரப்பு அதிகமாகிறது. இது ஓர் ஆன்மிகப் பயணம் என்று நினைக்கையில் ஸ்ட்ரெஸ் குறைகிறது. மனத் தெளிவும், மன உழற்சியற்ற அமைதியான மன நிலையும் கிடைக்கிறது.
7. சம நிலையற்ற தரையில் நடந்து செல்லும்போது கால் மூட்டுக்கள் நிலைத்தன்மையும் பலமும் பெறுகின்றன. அனுகூலமான காலணிகள் ஸ்ட்ரெஸ் குறையவும் காலில் அடிபடாமலும் பாதுகாக்க உதவுகின்றன.
8. அதிகாலையில் படியேறி செல்லும்போது, இயற்கையான வெளிச்சம் உடலில் பட்டு உடலின் சர்காடியன் ரிதம் ஒழுங்குபடுத்தப்படுகிறது. இதனால் இரவில் அமைதியான ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு கிடைக்கிறது. அத்துடன் உடல் ஓய்வும் பெறுகிறது.
9. நீண்ட நேரம் படிக்கட்டுகளில் ஏறும் பயணம் மேற்கொள்ளும்போது வியர்வை மூலம் உடல் நீர்ச் சத்தை இழக்கிறது. இதனால் அடிக்கடி தண்ணீர் அல்லது இளநீர் போன்ற எலக்ட்ரோலைட்கள் நிறைந்த பானம் அருந்துவது அவசியமாகிறது. இதனால் உடலில் தாங்கும் மனத்திடச் சக்தி அதிகரிக்கும். தசைப் பிடிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று திரும்பினால் ஆன்ம பலமும் உடல் பலமும் ஒருங்கே பெறலாம் என்பது உறுதி.