செல்வங்களையும் நற்கதியையும் அளிக்கும் கருட சேவை தரிசனம்!

காஞ்சிபுரம் கருட சேவை
Kanchipuram Garuda Sevaihttps://www.youtube.com

வைணவத் தலங்களில் பெருமாள் பிரம்மோத்ஸவ விழாவில் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது, ‘கருட சேவை’ என அழைக்கப்படுகிறது. வேதம் கருடன். வேதத்தின் பொருள் திருமால். வேதத்தின் மூலம் வேதம் காட்டும் பரம்பொருளை தரிசிப்பதே கருட சேவையின் உட்பொருளாகும்.

கருடாழ்வார் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தனது இரு கரங்களில் தாங்கி வீதியுலா வரும் காட்சியே கருட சேவையாகும். கருட சேவை பிரம்மோத்ஸவத்தில் மட்டுமின்றி, வசந்தோத்ஸவம் மற்றும் ரதசப்தமி உத்ஸவ தினங்களிலும் ஒரு நாள் கருட சேவை கொண்டாடப்படுகிறது.

திருமாலின் வாகனமாகத் திகழ்பவர் கருடன். இவரை பெரிய திருவடி என்று அழைப்பர். கருட சேவையன்று பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும்போது கருடன் வானத்தில் வட்டமிட்டுப் பறப்பதைக் காணலாம். பெருமாளை கருட வாகனத்தில் சேவிப்போருக்கு வைகுண்டப்பேறு நிச்சயம் என்பது ஐதீகம். பெருமாளை எத்தனை விதமான வாகனங்களில் வீதியுலா வரும்போது தரிசித்தாலும் கருட வாகனத்தில் தரிசிப்பது என்பது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.

காசியபர் விநதைக்கு இரண்டாவது மகனாக ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் கருடாழ்வார். பறவைகளில் கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் உயரே பறக்கும் சக்தியுடையது. வானத்தில் கருடனைப் பார்க்கும்போது கைகூப்பி வணங்காமல் மானசீகமாக வணங்க வேண்டும்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருட சேவை உத்ஸவம் மிகவும் பிரபலமான ஒன்று. காஞ்சிபுரத்தில் வைகாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோத்ஸவத்தில் கருட சேவை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், நவதிருப்பதிகள், திருநாராயணபுரம், திருநாங்கூர், தஞ்சாவூர், கும்பகோணம் முதலான திருத்தலங்களில் நடைபெறும் கருட சேவை உத்ஸவங்கள் மிகவும் பிரசித்தமானவை.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் திவ்ய சேதத்தில் தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை உத்ஸவம் கொண்டாடப்படுகிறது. திருநாங்கூரைச் சுற்றி அமைந்துள்ள பதினோரு திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள் கருட வாகனத்தில் கொண்டு வரப்பட்டு திருநாங்கூர் திவ்ய தேசத்தில் பதினோரு கருட சேவை தரிசனம் நடைபெறுவது வழக்கம்.

கும்பகோணத்தில் வருடந்தோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாவது திதியான அட்சய திருதியையன்று காலையில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவத் தலங்களில் இருந்து 12 கருட வாகனங்களில் உத்ஸவப் பெருமாள் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டில் திருமணமா? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்!
காஞ்சிபுரம் கருட சேவை

தஞ்சாவூரில் வைகாசி திருவோண நட்சத்திரத்தில் தஞ்சையில் உள்ள 24 கோயில்களைச் சேர்ந்த உத்ஸவப் பெருமாள்கள் கருட வாகனத்தில் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு தஞ்சை வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பது தொன்று தொட்டு நடைபெறும் ஒரு அற்புதமான நிகழ்வாகும்.

ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என ஆறு குணங்களுடன் திகழ்பவர் கருடன். கருட தரிசனம் குடும்ப நலத்தையும், தைரியத்தையும், எதிரிகள் இல்லாத நிலையையும், செல்வத்தையும், நற்கதியையும் அளிக்கும் என்பது ஐதீகம். கருட சேவையை தரிசித்தால் அனைத்து பாவங்களும், நாக தோஷங்களும், நாள்பட்ட வியாதிகளும் அகலும் என்பதும் நம்பிக்கை.

காஞ்சிபுரத்தில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். நாளை புதன் கிழமை 22.05.2024 அன்று அதிகாலை நான்கு மணிக்கு காஞ்சிபுரத்தில் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயிலில் கருட சேவை உத்ஸவம் நடைபெற இருக்கிறது. இந்த உத்ஸவத்தில் பக்தர்கள் பங்கேற்று பெருமாளையும் பெரிய திருவடியையும் ஒருசேர தரிசித்து அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோமாக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com