

புகழ்பெற்ற இதிகாசங்களில் ஒன்று இராமாயணமாகும்.
அந்த மகாகாவியத்தை அறிந்த பலருக்கும் ஶ்ரீராமபிரான் மீது கொண்ட பக்தியால் அனுமன் இஷ்ட தெய்வமாக விளங்குகிறாா்.
வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன், என அழைக்கப்படும் இவரின் அவதாரம் பலரும் அறிந்ததே!
அனுமனை சிவபெருமானின் ருத்ர அவதாரம் என்றும் அழைப்பாா்கள்.
ராவணனை அழிக்க மகாவிஷ்ணு ராமராக அவதரித்தபோது தேவர்கள் பலரும் பல சக்திகளை கொடுத்து உதவினாா்கள்.
கிஷ்கிந்தை வனப்பகுதியில் வானரசேனையின் அரசன் கேசரி மற்றும் அவரது மனைவி அஞ்சனைதேவியும் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை பூஜித்தாா்கள்.
அப்போது சிவன் தனது சக்தியை வாயுபகவானிடம் கொடுத்து, அஞ்சனைதேவியிடம் கொடுக்கச் சொன்னாா்.
இதன் மூலம் மாா்கழி மாதம் மூல நட்சத்திரமும் அமாவாசையும் இணையும் நாளில் அஞ்சனை மைந்தனாக அனுமன் அவதரித்தாா்.
இன்று (19.12.2025ல்) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடாப்படுகிறது.
அனுமந்த் ஜெயந்தி அன்று விரதமிருந்து, வீட்டை சுத்தம் செய்து கோலம்போட்டு, நெய்தீபம் ஏற்றி அனுமன் படத்திற்கு சிகப்பு மாலை போட்டு, அவருக்கு பிடித்தமான வெற்றிலை மாலை, வடைமாலை, பழங்கள், வெண்ணைய்காப்பு, துளசி இவைகளை சாற்றி வழிபாடு செய்யவேண்டும்.
தனது கோாிக்கைகளை பேப்பரில் எழுதிவைத்து நூல் கொண்டு மாலையாய் தொடுத்தும் போடலாம். ராமநாமத்தை உச்சரிப்பவர்களுக்கு உடனடியாக வந்து உதவி செய்பவரே அனுமன் என்றும் கூறலாம்.
ராமநாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பாா் என்பது ஐதீகம்.
இராமயணத்தில் ராமபிரானுக்குப்பிறகு அனைவராலும் கொண்டாடப்படும் கடவுள் அனுமான் ஒருவரே ஆகும்.
அனுமன், அஞ்சனை மைந்தன், ராமபக்தன், ராமதூதன், வாயுபுத்திரன், சிரஞ்சீவி, மாருதி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறாா்.
ராவணனால் கடத்தப்பட்ட சீதா தேவியை காப்பாற்றி மீட்டுக் கொண்டு வருவதில் ராமபிரானுக்கு பல உதவிகள் செய்த வகையில் பெரும்பங்கு வகித்தவர் அனுமன் ஒருவரே.
அவரது ஜெயந்தியானது பல ஊர் ஆலயங்களில் கொண்டாடட்ப்படுகிறது. அதே நேரம் அனுமன் ஜெயந்தி நாளில் 18அடி உயரமுள்ள நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாற்றப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாமக்கல் வந்து ஹனுமனை வழிபட்டு வருகிறாா்கள்.
அன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
அனுமன் மற்றும் விநாகயப் பெருமானை வழிபட்டு வருகிறவர்களுக்கு சனீஸ்வர பகவானின் தாக்கம் குறையும் என்பதும் நடைமுறை உண்மையாகும்.
ஆக இந்த நாளில் அனுமனை வழிபடுவோம், அவரது அருளைப் பெறுவோம்!