

மஹாபாரதத்தில் வீரர்கள் ஒவ்வொருவரின் தேரிலும் தனித்துவம் வாய்ந்த கொடி ஒன்று உண்டு. அர்ஜுனனனின் தேரின் மேல் இருந்த கொடியில் அனுமன் இருக்கிறார். அனுமன் எப்படி அங்கே வந்து அமர்ந்தார்? இந்த இரகசியத்தை ஶ்ரீ சத்ய சாயிபாபா அருமையாக விளக்குகிறார்.
ஒவ்வொரு நகரமாக ஜெயித்துக் கொண்டே வந்த அர்ஜுனன் ராம சேது இருக்கும் இடத்திற்கு வந்தான். ராமர் கட்டிய சேதுவைப் பார்த்தான். அவனுக்கு தன் திறமை பற்றிய கர்வம் மேலோங்கியது. ராமரின் வில் திறமையை விடத் தனக்கு அதிகம் திறமை இருக்கிறது என்று அவன் எண்ணினான். அவர் வில்லினால் சேதுவை அமைக்கத் திறன் இல்லாததால் தான் ஒவ்வொரு கல்லாக வைத்து சேது பாலத்தை அமைத்தார் என்று நினைத்தான் அவன்.
“நானாக இருந்தால் பாணத்தை விட்டு அம்புகளினால் ஆன ஒரு பாலத்தைக் கட்டி இருப்பேன். அதன் மீது பெரும் படையே போகலாம்” என்று அவன் எண்ணினான். திடீரென்று அவனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. அவனுக்கு முன்னால் அனுமன் தோன்றினார்.
அனுமன் அர்ஜுனனின் கர்வத்தைப் போக்க அவனை நோக்கிக் கூறினார்: “எங்கே வில்லினால் ஒரு அமைப்பை உருவாக்கு பார்ப்போம். அதில் ஒரு குரங்கு கூடப் போக முடியாத அளவிற்கு அது இருக்க வேண்டும்” என்றார். அர்ஜுனன் இந்த சவாலை ஏற்றான். ஏராளமான அம்புகளை ஒன்றுடன் ஒன்று தொடுத்து வலிமை மிக்க ஒரு பாலத்தை உருவாக்கினான். அனுமனோ சிரித்தார். இது எதற்கும் லாயக்கில்லாத வலிமையற்ற வில் கூடு,” என்றார் அனுமன்.
உடனே அர்ஜுனன் “இதை மட்டும் நீங்கள் நிரூபித்தால் உடனே நான் தீயில் புகுந்து உயிரை விடுகிறேன்” என்றான். அனுமான் அந்த வில் பாலத்தின் மீது சில அடிகள் எடுத்து வைத்தார். அது அப்படியே விழுந்து நொறுங்கியது. அர்ஜுனனின் கர்வமும் நொறுங்கி போனது. அவன் மிகவும் வருந்தினான். சொன்ன சொல்லின் படி தீயில் புக அவன் தயாரானான். அப்போது அங்கே கிருஷ்ணர் தோன்றினார். “என்ன விஷயம்” என்று ஒன்றுமே தெரியாதது போலக் கேட்டார் அவர். அர்ஜுனன் நடந்ததைச் சொன்னான்.
உடனே கிருஷ்ணர், “சாட்சி இல்லாத எந்த ஒரு ஒப்பந்தமும் செல்லாது. இப்போது நான் இருக்கிறேன். நீ மீண்டும் வில்லினால் பாலத்தை அமை. அனுமன் நடக்கட்டும். அது நொறுங்குகிறதா என்று பார்ப்போம்” என்றார். அனுமன் ஒப்புக் கொள்ள, அர்ஜுனன் மீண்டும் தன் வில் திறமையைக் காட்டினான். இப்போது அனுமன் அதன் மீது ஏறி நடந்தார். பாலம் உடையவே இல்லை. திகைத்துப் போன அனுமன் தன் முழு பலத்தையும் காட்டினார். பாலம் வலிமையாக அப்படியே இருந்தது.
அவர் குதித்துப் பார்த்தார். ஊஹூம்! பாலம் உடையவே இல்லை. ரகசியம் என்னவென்றால் அனுமன் கால் வைத்த இடத்தில் எல்லாம் கிருஷ்ணன் பாலத்தின் அடியில் தன் முதுகை வைத்தார். மந்தார மலையைத் தூக்கிய அதே வலிமை அங்கு இருந்தது. அனுமன் ஆச்சரியப்பட்டு காரணத்தைக் கேட்க கிருஷ்ணர் தன் முதுகைக் காட்டினார். அங்கே ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
இறைவன் தன் பக்தனைக் காக்க எப்போதும் உடனடியாக வருவான் என்பதை அனுமனும் அர்ஜுனனும் உணர்ந்தனர். அர்ஜுனனின் கர்வம் அகன்றது. அவன் அனுமனின் காலில் வீழ்ந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டியதோடு நடக்க இருக்கும் போரில் தனக்கு உதவி புரிய வேண்டும் என்று வேண்டினான்.
அனுமனும் மனம் இரங்கினார். “உனது தேரின் கொடியில் நான் அமர்கிறேன். நீ ஜெயிப்பாய்” என்றார் அவர். அப்படியே அவர் அர்ஜுனனின் தேர்க் கொடியில் அமர்ந்தார்.
(பிரசாந்தி நிலையத்தில் 16-10-1964 அன்று ஆற்றிய உரையில் பாபா இப்படியாக அனுமன் அர்ஜுனன் தேர்க்கொடியில் அமர்ந்த ரகசியத்தை விளக்கினார்.)