தெய்வங்களின் திருமணத் திருநாள் பங்குனி உத்திரம்!

Deivangalin Thirumana thirunaal Panguni Uthiram
Deivangalin Thirumana thirunaal Panguni Uthiram
Published on

ன்னிரண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணியத் திருநாள் பங்குனி உத்திரம். பொதுவாக, ஒவ்வொரு  மாதத்திலும் வரும் பௌர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்குரிய நாளாக இருக்கும். ஆனால், பங்குனி மாத பௌர்ணமியன்று வரும் பங்குனி உத்திரத் திருநாள் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.  அநேகமாக இன்று அனைத்துக் கோயில்களிலும் சிறப்பான திருநாளாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

முருகன் கோயில்களில் கொடியேற்ற உத்ஸவத்துடன் ஆரம்பித்து பங்குனி உத்திரம் திருவிழா 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும். இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி சிரத்தையாக விரதமிருந்து, காவடி எடுத்து, பாத யாத்திரையாக அறுபடை வீடு கோயில்களுக்கும் வந்து வழிபடுவது வழக்கம்.

சிவன் கோயில்களிலும் பங்குனி உத்திரம் மிகவும் விசேஷம். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாயன்மார்கள் அறுபத்து மூவருக்கும் விழா எடுத்து இறுதியில் ஐயனுக்கும் அம்பாளுக்கும் நடக்கும் திருமண விழா, தேரோட்டம் என்று இனிதாக கோலாகலமாக நிறைவு பெறும். சென்னையில் பிரபலமான மயிலை கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கோயிலிலும், திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத மருந்தீஸ்வரர்  கோயிலிலும் வெகு விமரிசையாக பங்குனித் திருவிழா நடைபெறும். பல அம்மன் கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறும்.  சாஸ்தா கோயில்களில் ஸ்ரீ ஐயப்பன் அவதரித்த நன்னாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படும்.

இது மட்டுமா? பல வைணவக் கோயில்களிலும் பங்குனி உத்திரம் விசேஷமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழ் புத்தாண்டு தொடங்குவதால் பங்குனி தமிழ் வருடத்தின் கடைசி மாதமாக இருக்கும். ஆனால், இது தமிழ் மாதங்களில் மங்கல மாதம் என்று போற்றக்கூடியது. வீடுகளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை இந்த நன்னாளில் செய்வார்கள். ஆனால், எல்லாவற்றையும் விட கூடுதல் விசேஷம், கூடுதல் சிறப்பு இந்த பங்குனி உத்திர நன்னாளில் அநேக தெய்வத் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதேயாகும்.

இந்த பங்குனி உத்திர நன்னாளில் எந்தெந்த தெய்வங்களுக்கு திருமணம் நடைபெற்றது என்பதைப் பார்ப்போமா?

முருமன் தெய்வானை திருமனம்
முருமன் தெய்வானை திருமனம்

இமவானின் மகள் பார்வதியை சிவபெருமான் மணந்தார். இதனால் அனைத்து சிவன் கோயில்களிலும் ஐயனுக்கும் அம்பாளுக்கும் இன்று திருமணத் திருவிழா நடைபெறும்.  திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மனை மணந்தார். திருத்தணியில் ஸ்ரீ முருகன் வள்ளி தேவியை மணமுடித்தார்.

இதைத்தவிர ஸ்ரீராமன், சீதா தேவியை மணமுடித்த நன்னாளும் பங்குனி உத்திரம்தான். கூடவே அவர் சகோதரர்கள் பரதன் மாண்டவியையும், லட்சுமணன் ஊர்மிளையையும், சத்ருகனன் சுருதகீர்த்தியையும் அதே நாளில் திருமணம் செய்து கொண்டார்கள்.

வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னாரை மணம் புரிந்ததும் பங்குனி உத்திரமன்றுதான்.

‘வாரணமாயிரம் சூழ வலம் செய்து, நாரண நம்பி நடக்கின்றானென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்.  மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்’ என்று தனது கனவினை விவரித்த  பூரத்துதித்த புகழ்க்கொடி ஸ்ரீ கோதை நாச்சியார் ஸ்ரீ ரங்கமன்னாரை தனது கனவில் கண்டவாறே திருமணம் செய்து கொண்ட திருநாள் பங்குனி உத்திரம் தான்.

இதையும் படியுங்கள்:
ஹோலி பண்டிகையின் கலாசாரம் தெரியுமா?
Deivangalin Thirumana thirunaal Panguni Uthiram

அதே நாளில் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமணம். அன்று ‘சேர்த்தி காணும் உத்ஸவம்’ என்று பெருமாளும் தாயாரும் தேரில் சேர்ந்து ஊர்வலம் வரும் திருக்காட்சியும் நடைபெறும். காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும் தாயாருக்கும் பங்குனி உத்திரத்தன்றுதான் திருக்கல்யாணம்.

பங்குனி உத்திரத்தன்று எந்தக் கோயிலுக்குச் சென்று எந்த தெய்வத்தை கல்யாண திருக்கோலத்தில் தரிசித்தாலும் நம் குடும்பங்களில் திருமண தோஷம் அகன்று, நம் குழந்தைகளுக்கும் திருமண பாக்கியம் கூடி வந்து வீட்டில் சகல சுபகாரியங்களும் நடைபெறும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com