24 மணிநேரம்... 110 கிலோமீட்டர்... வெறும் கால்களில் ஒரு பக்திப் பயணம்!


Devotional journey!
Devotional journey!
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. முஞ்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து தொடங்கும் இந்த ஓட்டமானது நட்டாலம் சங்கர நாராயணர் ஆலயத்தில் நிறைவடையும். 110 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த ஓட்டத்தில் பங்கேற்கக் கூடிய பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள். 12 சிவாலயங்களுக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்று ஈசனை வழிபடுவது வழக்கம்.

சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக கோவிந்தா, கோபாலா என்று கூறியவாறு ஓடுவது வழக்கம். பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று நாட்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு மகாசிவராத்திரி அன்று ஓட்டத்தை ஆரம்பிப்பார்கள். இதில் பங்கு பெரும் பக்தர்கள் காவி உடை அணிந்து, காலில் செருப்பு அணியாமல் 24 மணி நேரத்தில் 12 சிவாலயங்களையும் ஓடி  தரிசனம் செய்வார்கள்.

இந்த ஓட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். அவர்கள் சிறிய பையில் விபூதியை எடுத்துக்கொண்டு பனை ஓலை விசிறியுடன் ஓட தொடங்குகின்றனர். சபரிமலைக்கு செல்பவர்கள் போல் சிவாலய ஓட்டத்திலும் ஒரு குருசாமி இருந்து வழி நடத்திச் செல்வார். இவர்கள் இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு, இரவில் துளசி இலையும், துளசி தீர்த்தமும் மட்டுமே எடுத்துக் கொண்டு கடுமையாக விரதம் இருந்து ஈசனை தரிசிக்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அடியவர்களுக்கு ஆங்காங்கே மோர், பழரசம், பானகம், கிழங்கு, கஞ்சி போன்றவற்றைக் கொடுத்து பக்தர்கள் பலரும் மகேஸ்வர பூஜை செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மங்கள சொற்களின் மகிமை: முன்னோர்கள் காட்டிய வாழ்வியல் ரகசியம்!

Devotional journey!

இந்த சிவாலய ஓட்டம் 18ஆம் நூற்றாண்டில் இருந்து நடைபெற்று வருவதாக ஓலைச்சுவடிகள் கூறுகின்றன. முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கப்படும் இந்த சிவாலய ஓட்டமானது திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராத மூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டசாமி, மேலாங்கோடு காலகாலர், திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர், திருவிதாங்கோடு மகாதேவர், திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில் ஆகியவை வழியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவு பெறும்.

இங்குள்ள திருக்குளத்தில் பக்தர்கள்  நீராடி ஈசனையும் அங்கு கோவில் கொண்டுள்ள சங்கரநாராயணரையும் தரிசித்து சந்தன பிரசாதம் வாங்கி நெற்றியில் அணிந்த பின்பே சிவாலய ஓட்டம் நிறைவு பெறுகின்றது.

logo
Kalki Online
kalkionline.com