
பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் தத்தமது அரண்மனைகளுக்கு முன்பு ஒரு பெரிய ‘மகா பேரி’ என்ற மேளத்தை நிறுவி, ‘பொதுமக்கள் எந்தத் தேவையாக இருந்தாலும் எந்நேரத்திலும் வந்து இந்த மேளத்தை அடித்து தமது விருப்பத்தை தெரிவித்தால் முடிந்தவரை அவர்களது தேவைகளை உடனே நிறைவேற்றுவோம்’ என்று குடிமக்களுக்கு அறிவித்திருந்தார்கள்.
இதையறிந்த ஒரு முதிய பிராமணர் கொஞ்சம் பொருள் வேண்டி தலைநகரை நோக்கிச் சென்றார். நீண்ட தூரம் பயணித்தவர், நடு இரவில் தர்மரின் அரண்மனையை அடைந்து, மிகுந்த ஆவலுடன் அந்த மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். உறக்கத்தில் இருந்த தர்மர், யாரோ தமது தேவைக்காக தன்னை அழைப்பதை உணர்ந்தார். உடனே காவலர்களை வாயிலுக்கு அனுப்பி விஷயத்தை அறிந்து வரச் சொன்னார்.
சென்ற காவலர்கள் உடனே தர்மரிடம் திரும்பி வந்து, ஒரு முதியவர் தனிப்பட்ட தமது தேவைக்காக செல்வம் பெற வந்திருப்பதாகக் கூறினர். தர்மர் நல்ல தூக்கத்தில் இருந்ததால், ‘நடு இரவு ஆகிவிட்டது. காலையில் அவரது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும்’ என்று உறுதி அளித்து, அவரை காலையில் வரச் சொல்லி திருப்பி அனுப்புமாறு காவலர்களிடம் கூறினார். தர்மரின் செய்தியை கேட்டு அந்த பிராமணர் ஏமாற்றமடைந்து, பீமனின் அரண்மனைக்கு முன்பு இருந்த மேளத்தை அடிக்க ஆரம்பித்தார்.
உடனே பீமன் வெளியே வந்து, அந்த முதிய பிராமணருக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். தர்மரின் அரண்மனை முன்பாக நடந்ததைச் சொல்லியதோடு, தனது கோரிக்கையை முன்வைத்தார் அந்த பிராமணர். அவருடைய கோரிக்கையைக் கேட்ட பீமன், தற்போது இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் கருவூலம் திறந்து இருக்காது. அதேநேரம் அவரது கோரிக்கையை நிறைவேற்ற காலை வரையும் காத்திருக்க முடியாது. எனவே, தாம் அணிந்திருந்த விலையுயர்ந்த தங்கக் காப்பை கழற்றி அந்த பிராமணரிடம் கொடுத்தார். பிராமணர் அதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் தமது கிராமத்திற்குத் திரும்பினார்.
அதைத் தொடர்ந்து, தர்மரின் அரண்மனையை நோக்கி சென்ற பீமன், அங்கு வைக்கப்பட்டிருந்த மகா பேரி மேளத்தை இடைவிடாமல் அடிக்க ஆரம்பித்தான். அளவுக்கு அதிகமான அந்த சத்தத்தைக் கேட்ட தர்மர், ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து உடனடியாக வெளியே வந்தார். வெளியே வந்தவர் வாயிலில் பீமனைக் கண்டதும், ‘மகாபேரியை ஆக்ரோஷமாக அடிக்க என்ன காரணம்?’ என்று கேட்டார்.
உடனே பீமன், “உங்களிடம் உதவி நாடி வந்த ஒரு முதிய பிராமணரை நாளை காலை திரும்பி வரும்படி கூறியிருக்கிறீர்கள். ‘அடுத்த நாள் உயிருடன் இருப்போம்’ என்று அறிந்த ஒரே மனிதனால் மட்டுமே இப்படிக் கூற முடியும். இதன் மூலம் நீங்கள் நாளை காலை வரை உயிருடன் இருப்பீர்கள் என்று அறிந்துகொள்ளும் ஞானத்தைப் பெற்று விட்டீர்கள் என்று பொருளாகிறது. என் அண்ணன் இப்படிப்பட்ட மிகப்பெரிய ஞானியாக இருக்கிறார் என்று மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறேன். அதனால்தான் இந்த மேளத்தை அடிக்கிறேன்” என்றான்.
அதைக் கேட்ட தர்மர், குற்ற உணர்வுடன் தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்தார். அது மட்டுமின்றி, பீமனை கட்டித்தழுவி, “தர்ம காரியத்தை இனி தள்ளிப்போடவே மாட்டேன்” என்று உறுதி கூறினார்.
உடனே பீமனும், “தர்மம் செய்யும்போது ஒருபோதும் தாமதம் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் நான் இப்படி மேளம் அடித்தேன்” என்று புன்னகை செய்தான். அதிலிருந்து தர்ம பாதையிலிருந்து விலகாமல் இருந்ததால்தான் தர்மராஜா என்ற பெயரையும் பெற்றார் தர்மர்.