சிவபெருமானையும் சந்திர பகவானையும் ஒருசேர தரிசித்த பலனைத் தரும் மூன்றாம் பிறை வழிபாடு!
அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் சந்திர தரிசனம் என்பது வழிபாட்டில் மிகவும் முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. காரணம், இந்த பிறை நிலவு சிவபெருமானின் சிரசில் இடம்பெற்றிருப்பதால்தான். மூன்றாம் பிறை நிலவை தரிசித்தால் ஈசனையே தரிசித்ததாகத்தான் அர்த்தம். அன்றைய தினத்தில் சந்திர பகவானை வணங்கினால் அந்த ஈசனையே தரிசித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
சிவன் சூடிய பிறை சந்திரன்: மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் மட்டுல்ல, அந்த சிவபெருமானின் ஒரு பகுதியை நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம், 'ஸ்ரீ சந்திர மௌலீஸ்வராய நம' அல்லது 'ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரா போற்றி' என்று இடைவிடாமல் ஜபித்து வந்தால் மனம் அமைதி அடையும். இதனால் அறிவு ஒளி பெற்று தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வ வளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மூன்றாம் பிறை பிறந்த கதை: ஒரு சமயம் விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிறகு விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர், சந்திரனையும் பார்க்கச் சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவைப் பார்த்து பரிகசித்தான்.
இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான், ‘உனது அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள்’ என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. இதனால் பொலிவிழந்த சந்திரன், கவலை அடைந்து மனம் வருந்தினான். பிறகு சிவனை நோக்கிக் கடும் தவம் இருந்து தனது பழைய அழகைப் பெற்றான்.
சந்திரனை வணங்கும் முறை: ஒரு தாம்பூலத் தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி, அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு, மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அப்போது இறைவனை மும்மூர்த்தியாக பாவித்து வணங்க வேண்டும். அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும். தேவையைக் கேட்க வேண்டும். இந்தத் தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு மற்றும் தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும்.
பொதுவாகவே, மூன்றாம் பிறை தரிசனம் வெளிச்சம் இருக்கும்போது நம் கண்களுக்குப் புலப்படாது. சந்திர பகவானை தரிசனம் செய்வதற்கு முன்பாக, உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு தங்க நகை, ஒரு ரூபாய் நாணயம் இவை இரண்டையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சந்திரனை பார்க்கும்போது தங்க ஆபரணத்தையும், ஒரு ரூபாய் நாணயத்தையும் உள்ளங்கைகளில் வைத்து, அதன் பின்பு சந்திர பகவானை தரிசனம் செய்ய வேண்டும்.
மேலும், சந்திரனிடமும், வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும்போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவதாகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார். சிவபெருமான் கூட அனுதினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். அதனால் அடிபணிந்து முழு மனதோடு வணங்க வேண்டும்.
இவ்வாறு வணங்கி முடித்த பிறகு அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும். பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்க வேண்டும். இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நல்லது.
மூன்றாம் பிறையை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள்: மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் நீங்கி, பேரானந்தத்தையும், மன அமைதியையும் தரும். மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். கண் பார்வை தெளிவாகும். மனதிற்கு காரணமான சந்திர பகவானை வணங்குவதால் தெளிவான மனநிலையை அடையலாம். மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவங்களைப் போக்கும்.