
வாயு புத்திரனான ஹனுமான் சிறு வயதிலிருந்தே நித்திய பிரம்மச்சாரியாக இருந்தார். ஹனுமான் தன் வாழ்நாளில் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவர். அனைத்து பெண்களையும் அன்னையாக நினைக்கும் உயரிய எண்ணம் கொண்டவர். பிரம்மச்சரியத்தின் முழு அடையாளமான அனுமனுக்கு ஒரு மகன் இருந்தான் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா! ஆனால், ராமாயணத்தின் சில பதிப்புகளில் ஹனுமானுக்கு மகன் இருப்பதை பற்றி எழுதியுள்ளனர்.
ஹனுமானின் மகன்
ஶ்ரீ ராமருக்காக தூது சென்ற ஹனுமானை இராவணன் அவமதித்து அவரது வாலில் நெருப்பு வைக்க சொல்லி உத்தரவிட்டான். ஹனுமான் வாலில் நெருப்பு வைத்த பின், அவரோ அங்குள்ள ஒவ்வொரு கட்டிடத்தில் அந்த நெருப்பை பற்ற வைத்தார்.
இதனால் நெருப்பு இலங்கை முழுக்க பரவி எரிந்தது. அனுமன் தனது வாலில் இருந்த நெருப்பை அணைக்க கடலில் குதித்தார். கடலில் குதித்தபோது அனுமனின் உடலில் இருந்து வியர்வை துளி கடலில் விழுந்தது. பெரிய மகரம் (மீனும் முதலையும் சேர்ந்த தோற்றம் கொண்ட உயிரினம்) ஒன்று அந்த வியர்வைத் துளியை உண்டுவிட்டது. அந்த வியர்வைத் துளி மகரத்திற்குள் ஒரு உயிரை உருவாக்கியது.
ஒரு நாள் அஹிரவனின் வீரர்கள் அந்தப் பெரிய மகரத்தை பிடித்து சமைப்பதற்காக வெட்டிய போது அதன் வயிற்றில் ஒரு வானரமும் மகரமும் சேர்ந்த உருவத்தைக் கொண்ட குழந்தையை கண்டனர். மகரத்திலிருந்து பிறந்ததால் அவருக்கு மகரத்வஜன் என்று அஹிரவன் பெயரிட்டு வளர்த்து, பாதாள உலகத்தின் வாயிற்காவலனாக ஆக்கினான்.
ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடந்து கொண்டிருந்த போது, ராவணனின் கட்டளைப்படி அஹிரவன் ராமனையும் லட்சுமணனையும் கடத்தி சென்றான். பாதாள உலகத்தில் மகாமாயா தேவிக்கு இருவரையும் பலியிட திட்டமிட்டான். ராம லட்சுமணர் கடத்தப்பட்டதை அறிந்த விபீஷணன், அவர்களை மீட்க அனுமனை பாதாள உலகத்திற்கு அனுப்பினான். ஹனுமான் பாதாள உலகை அடைந்த போது, ஏழு வாயில்களில் இருந்த ஒவ்வொரு வீரனையும் வீழ்த்தினார். ஆனால், இறுதி வாயில் காவலன் தன்னைப் போலவே இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். மகரத்வஜர் ஹனுமானைப் போல தோற்றமளித்தது மட்டுமல்லாமல், சக்தி, வலிமை மற்றும் வீரத்திலும் ஹனுமானுக்கு இணையானவராக இருந்தார். ஹனுமான் ராமனுக்கு விசுவாசமாக இருந்ததை போல மகரத்வஜர் அஹிரவனுக்கு விசுவாசமாக இருந்தார்.
ஹனுமான் அவனிடம், "யார் நீ?" என்று வினவினார்.
அதற்கு மகரத்வஜர், "நான் வாயு புத்திரன் ஹனுமானின் மகன்," என்று கூறினார். அதற்கு ஹனுமானோ "நான் சிறு வயதிலிருந்தே நித்திய பிரம்மச்சாரி. நீ எப்படி என் மகன் ஆவாய்?" என்று கடுமையாக திட்டினார். மகரத்வஜர் உடனே அனுமனின் காலில் விழுந்து தனது பிறப்புக் கதையை அனுமனுக்கு கூறினார். உண்மையை உணர்ந்த ஹனுமான் அவனை தனது மகனாக ஏற்றுக் கொண்டார். ஆயினும் மகரத்வஜர் தன்னை வளர்த்த அஹிரவனின் மீதுள்ள விசுவாசத்தால் ஹனுமானுக்காக வாயில் கதவை திறக்க மறுத்துவிட்டார். பின்னர் தந்தைக்கும் மகனுக்கும் மல்யுத்த சண்டை தொடங்கியது, இறுதியில் அனுமன் மகரத்வஜரை தன் வாலில் கட்டி இறுதி கதவையும் உடைத்து உள்ளே நுழைந்தார்.
உள்ளே சென்ற ஹனுமான் அஹிரவனுடன் போரிட்டு அவனை கொன்று ராமரையும் லட்சுமணனையும் மீட்டார். பின்னர் இருவரையும் தோள்களில் சுமந்து பாதாளத்தை விட்டு வெளியேற தொடங்கினார். ஹனுமானின் வாலில் அவரைப் போலவே தோற்றமளிக்கும் மகரத்வஜரைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இராமர் அனுமனிடம் அது பற்றி விசாரித்தார். அனுமன் முழு கதையையும் ஸ்ரீ ராமரிடம் கூறினார். அதன் பிறகு ராமர் மகரத்வஜரை விடுவிக்க உத்தரவிட்டார். மகரத்வஜரை ஆசீர்வதித்து, அவரை பாதாள உலகத்தின் அரசனாக நியமித்தார்.