தர்மங்கள் அழிந்து அதர்மங்கள் அரசோச்சும் காலம் வெகுதூரத்தில் இல்லை. மிகமிக அருகில்தான் இருக்கிறது என்கிறார் காரைசித்தர். அவர் கூற்றை படித்துப் பாருங்கள்.
"கலியுகம் கஷ்டத்தின் காலம், அக்காலத்தில் படிப்படியாக தீமைகளும் அதர்மங்களும் அதிகரிக்கும். தெய்வங்கள் விண்நாடி போய்விடும். தீமைகள் மண்ணகத்தில் தெருக்கூத்தாடும். உய்யுமுண்மை உள்ளத்துண்மை ஓடிப்போகும். உலக உண்மை விஞ்ஞானம் கூடிவேகும். வேதம் விபரீத நிலை அடையும். சாத்திரம் சக்தி இழந்து விடும். தர்மம் தலை குனிந்து நிற்கும். அதர்மம் ஆதிக்கம் செய்யும்.
சத்தியம் சாகும் நிலை அடையும். அசத்தியம் ஆட்சி பீடத்தில் அமரும். நீதி நிதிக்குள் ஒடுங்கி நிலை குலையும். உண்மை ஓடி ஒளிந்து கொள்ளும். பொய்.. மெய் மெய் என்று புகழப்படும். ஆசாரமற்ற அர்ச்சகர்கள் அதிகரித்து விடுவார்கள். ஆலயங்களில் அறநெறி தவறி அசம்பாவிதங்கள் பெருகிவிடும். திருத்தம் என்ற பெயரில் சீர்கேடுகள் அதிகரிக்கும். பாமரர்கள் தேர்ந்தெடுத்த பாதகர்கள் அரசாள்வார்கள்.
ஜாதிமத கலப்படம் அதிகரிக்கும். கொலை, களவு, கற்பழித்தல் அதிகரிக்கும். ஆசிரியர்கள் வழி நிற்காத மாணவர்கள் அதிகரிப்பார்கள். இது அகால மரணத்தை உண்டாக்கும் என்று அறிந்தும்.. வாகனம் ஓட்டி மரிப்பார்கள். அறச்செயல் குறைந்து அரசியல் அதிகரித்து அனாசாரம் பெருகும். இயற்கை சீற்றத்தால் சீரழிவு உண்டாகும். இறைவன் இருந்தும் இல்லாதவன் போல் இருப்பான்.
இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள சக்தி அளிக்க வேண்டும் என்று இறைவனிடம் துதிப்போம்!"
இப்போது நடப்பதை எப்போதோ எழுதி வைத்திருக்கிறார் பாருங்கள் இந்தச் சித்தர் பெருமான்.