
பகவான் மகாவிஷ்ணுவின் வாகனமாகத் திகழும் கருடனை கருடாழ்வார், விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி, கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், மோதகாமோதர், மங்களாலயர், சோமகாரீ, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். கருடன் குறித்த சில சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.
* குப்தர்களுடைய நாட்டு நாணயத்தில் கருடனின் உருவத்தைப் பதித்திருந்தார்கள்.
* மௌரியர்கள் கருடனை அதிர்ஷ்டம் நிறைந்த கடவுளாகக் கருதி வழிபட்டனர்.
* தேவகிரி யாதவர்களின் கொடியும் சின்னமும் கருடன்தான்.
* ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோயிலில் கருடாழ்வாருக்கு தனிச் சன்னிதி உண்டு. 5 அடி உயர பீடத்தில், 12 அடி உயரத்தில், இங்கு இவர் அமர்ந்த கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
* விண்ணுலகில் இருந்து கருடன் கொண்டு வந்த அமிர்த கலசத்தில் சூட்டப்பட்டிருந்த தேவலோகப் புல்லே தர்ப்பை ஆகும்.
* அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 16 கருட சேவை புகழ் பெற்றது.
* திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கையில் கருடாழ்வார் பெரிய உருவில் காட்சி தருகிறார். இவர் பாம்பையே ஆடையாக அணிந்துள்ளதாக ஐதீகம். 9 கெஜ புடைவைதான் இவருக்கு அணிவிக்கப்படுகிறது.
* கருடன் வேதங்கள் அறிந்த பண்டிதன் என்று பத்ம புராணம் இவரைப் புகழ்கிறது.
* கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் திருத்தலத்தில் 684 அடி நீளமும் 225 அடி அகலமும் கொண்ட ஒரு திருக்குளம் உள்ளது. இதில் உள்ள தீர்த்தம் மிகவும் புனிதமானது. இத்தலத்தில் அருளும் நம்பி எம்பெருமான் அனுபவிப்பதற்காக திருப்பாற்கடலில் இருந்து வைர முடியை கருடாழ்வார் எடுத்து வரும்போது, அதில் இருந்த ஒரு மணி கழன்று இந்தக் குளத்தில் விழுந்ததாக ஐதீகம். எனவே, இந்தக் குளம் மணிமுத்தாறு என்று அழைக்கப்படுகிறது.
* ஸ்ரீவைகுண்டம் கோயிலில் கருட பகவான் தனது சிறகுகளை உயரே தூக்கி, பறக்கும் நிலையில் பறவையாகக் காட்சி தருகிறார்.
* ஆழ்வார்திருநகரி அருகில் பெருங்குளம் என்னும் ஊரில் உள்ள கருடாழ்வார் உத்ஸவ பெருமாளுக்கு அருகிலேயே காட்சி தருகிறார்.
* கருடன் தகர்த்த மேருமலையின் ஒரு பகுதிதான் இலங்கை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் சன்னிதியில், ஸ்ரீரங்கமன்னாருடன் ஆண்டாள் மற்றும் கருடாழ்வார் அருகருகே காட்சி தருவது விசேஷம்.
* சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள பைராகி மடம் திருவேங்கடம் ஏழுமலையான் ஆலயத்தில், பெண் வடிவிலான கருடனை தரிசிக்கலாம். கார்த்திகை மாத உத்ஸவத்தின்போது, அலர்மேலுமங்கை தாயார் இந்த பெண் கருட வாகனத்தில்தான் வீதி உலா வருகிறார்.
* திருக்கண்ணங்குடி தலத்தில் கருடாழ்வார் கைகளை காட்டிய கோலத்தில் தரிசனம் தருகிறார்.
* தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள எண்கண் தலத்தில் ஆதிநாராயண பெருமாள் கருடன் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
* மன்னார்குடி, ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள ஒற்றைக் கல்லால் ஆன கருட கம்பம் அபூர்வமானது.
* கும்பகோணம், நாச்சியார்கோவில் கல் கருடனுக்கு, பயத்தம் பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்த்த அமிர்த கலசம் எனும் பிரசாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
* தஞ்சை, நீலமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று 18 கருட சேவை விமரிசையாக நடைபெறுகிறது.