உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் தேர் திருவிழா ஜூன் 27 அன்று வெகு விமரிசையாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய தேர் திருவிழாவான இது, மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. திருவிழாவில் தேர் வடத்தை பிடித்து இழுப்பவர்களுக்கு ஜெகந்நாதரின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பதால், உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் புரியில் குவிந்துள்ளனர். இந்த தேர் திருவிழா மொத்தம் 9 நாட்கள் நடைபெறும்.
செர் பாஹாரா:
தேர் ஊர்வலம் தொடங்கும் முன் ஒரு சிறப்பு சடங்கு நடைபெறுகிறது. அதற்கு செர் பஹாரா என்று பெயர். இந்த சடங்கின்படி மூன்று தேர்கள் ஊர்வலம் வர இருக்கும் பாதைகளை புரியின் கஜபதி மஹாராஜா தங்கத்தில் செய்த துடைப்பத்தால் சுத்தம் செய்வார். இந்த பாரம்பரியமிக்க சடங்கை மன்னர் குடும்பம் தவிர வேறு எவரும் செய்ய முடியாது.
தங்கம் என்பது விலையுயர்ந்த பொருளாக இருந்தாலும், அதில் துடைப்பம் செய்தால் சுத்தம் செய்யத்தான் பயன்படும். இது ஒருவரின் உயர்ந்த நிலையில் இருந்தாலும் அவர் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஒருவர் எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும், கடவுளின் முன் சமமாக தான் பார்க்கப்படுகிறார் என்பதை செர் பாஹாரா சடங்கு உணர்த்துகிறது.
இது உலகை காக்கும் கடவுளின் மீதான மன்னரின் பக்திக்கும் பணிவுக்கும் சான்றாக உள்ளது. இந்த செயலின் மூலம் தன் நாட்டு மக்களை காக்கும் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவிக்கு மன்னர் நன்றி தெரிவிக்கிறார். பின்னர் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு, தேரின் வரவை எதிர்பார்த்து பக்தர்களால் உற்சாக குரல்கள் எழுப்பப்படுகின்றன. எங்கும் 'ஜெய் ஜெகந்நாத்' என்ற கோஷம் விண்ணை முட்டுகிறது. பக்தர்கள் ஆங்காங்கே மணிகளை அடித்துக் கொண்டும் , சங்கை ஊதியும் இறைவனை வரவேற்கிறார்கள்.
பிரம்மாண்டமான தேர்கள்:
புரியின் பிரம்மாண்டமான தேர் ஊர்வலத்திற்காக மூன்று பெரிய தேர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் ஜெகந்நாதரின் தேர் 45 அடி உயரத்துடன், 18 சக்கரங்களைக் கொண்டு மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேருக்கு 'நந்திகோஷம்' என்று பெயர்.
இரண்டாவது தேர் பாலபத்திரருக்காக 44 அடி உயரத்தில், 16 சக்கரங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. இந்த தேருக்கு 'தலத்வாஜ் ' என்று பெயர். மூன்றாவது தேர் சுபத்ரா தேவிக்காக 43 அடி உயரத்தில், 14 சக்கரங்களுடன் பிரம்மாண்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேருக்கு 'தர்படலன் ' என்று பெயர்.
இந்த தேர்கள் அனைத்தும் , ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்களிலிருந்து புதியதாக கட்டப்படுகின்றன. பாரம்பரிய கைவினை கலைஞர்கள் இந்த பிரமாண்டமான தேர்களை பல மாதங்கள் கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளனர். ஜெகந்நாதரின் நந்திகோஷம், பாலபத்ரரின் தலத்வஜா மற்றும் தேவி சுபத்ராவின் தர்படாலன் ஆகிய தேர்களை மிகச் சிறப்பான முறையில் அலங்காரம் செய்துள்ளனர். இந்த தேர்களின் பிரம்மாண்டமும் அலங்காரமும் அதன் புகழை மேலும் கூட்டுகின்றன .
திருவிழா:
தேர் ஊர்வலத்தின் முதல் நாளில் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் புரி கோயிலில் இருந்து தேர்களில் புறப்பட்டு, தங்கள் அத்தையின் வீடான குண்டிச்சா கோயிலுக்குச் சென்று 9 நாட்கள் தங்குகிறார்கள். இந்த 9 நாட்களும் குண்டிச்சா கோயிலில் கடவுளர்களின் மனம் குளிர சிறப்பு பூஜைகள் , சிறப்பு உபசரிப்புகள் செய்யப்படுகின்றன.
இந்த காலக் கட்டத்தில் குண்டிச்சா கோயில் முழுக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அதன் பின்னர் மூன்று கடவுள்களும் தங்களின் பாரம்பரிய இருப்பிடம் நோக்கி திரும்புகிறார்கள். இந்த ஊர் திரும்பும் தேர் ஊர்வலம் பகுடா யாத்திரை என்றழைக்கப்படுகிறது. பகுடா யாத்திரையின் போது பக்தர்கள் ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா! என்று கோஷமிட்டு தேர்களை இழுக்கிறார்கள்.