
ஜாதகம், பஞ்சாங்கம் போன்றவற்றின் மீதான நம்பிக்கை நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பண்டைய கால அரசர்கள், ரிஷிகள் என அனைவரும் பஞ்சாங்கம் பார்த்து அதன் வழியில் எதிர்காலத்தை கணித்துள்ளனர். தற்காலத்திலும் திருமணம், கிரகப்பிரவேசம், தொழில் தொடங்க என பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களுக்கு பஞ்சாங்கத்தையே நம்பி உள்ளனர்.
இக்காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், ஜோதிடக்கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
பொதுவாக சூரிய உதயம் முதல் இரவு வரையிலான காலகட்டம் தான் ஒரு நாள் என்று கூறப்படுகிறது. அந்த நாளில் கோள்களின் நகர்வுகளைக் கொண்டும், கோள்கள் எப்படி சுழல்கின்றன என்பதைக் கொண்டும் கணிப்பதே பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
பஞ்சாங்கம் என்ற வடமொழிச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளான வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் போன்றவற்றுடன் தொடர்பான அம்சங்களாகும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்பட்டது பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட கோவில்களில் வாக்கிய பஞ்சாங்க முறையே பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி கோவில் அனுஷ்டாக பஞ்சாங்கம் என்று கூறப்படும் வாக்கிய பஞ்சாங்கம் காலம்காலமாக பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும்.
வாக்கிய பஞ்சாங்கங்கள் காலப்போக்கில் பரவும் வாய்மொழி மரபுகளை அடிப்படையாகக் கொண்டவை, அதே நேரத்தில் திருக்கணித பஞ்சாங்கங்கள் நேரடி வானியல் அவதானிப்புகளை நம்பியுள்ளன. திருக்கணித பஞ்சாங்கங்கள் உத்தராயணங்களின் முன்னோடி போன்ற காரணிகளைக் கணக்கிடுவதால் அவை மிகவும் துல்லியமாகக் கருதப்படுகின்றன.
ஜோதிருக்கணித பஞ்சாங்கம் என்பது வாக்கிய பஞ்சாங்கத்தில் உள்ள சில விஷயங்கள் திருத்தியமைக்கப்பட்டு கடந்த சில நூறு வருடங்களுக்கு முன்பிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படுவது திருக்கணித பஞ்சாங்கமாகும்.
திடத்தைப் பொருத்தவரை பொதுவாக திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் என்ற இரண்டு வகையான பஞ்சாங்கங்களை ஜோதிடர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஆனாலும் இன்றைய சில நவீன கால ஜோதிடர்கள் வாக்கிய பஞ்சாங்கம் பிழை நிறைந்தது என்று கூறும் இவர்கள் திருக்கணித பஞ்சாங்கமே பிழை இல்லாதது சரியானது என்று கூறி அதையே பின்பற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
திருக்கணிதப் பஞ்சாங்கம் சரியா, வாக்கியப் பஞ்சாங்கம் சரியா என்ற விவாதம் பல காலமாக சென்று கொண்டிருக்கிறது. சிலர் வாக்கிய பஞ்சாங்கம் சரி என்றும், சிலர் திருக்கணித பஞ்சாங்கம் சரி என்று விவாதம் செய்கின்றனர். ஒவ்வொரு ஜோதிடரும் தங்களது படிப்பு மற்றும் ஆராய்ச்சி, அனுபவத்தைக் கொண்டு இந்த இரண்டு பஞ்சாங்கங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் வாக்கிய பஞ்சாங்கத்தை கோவில் அனுஷ்டாக பஞ்சாங்கம் என்றும், திருக்கணிதம் என்பது மனிதர்களின் எதிர்காலம், நிகழ்காலம் போன்றவற்றை கணித்து கூறுவதற்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி வருவதால் இந்த விவாதத்திற்கு இன்று வரை சரியான முடிவு தெரியவில்லை என்றே கூற வேண்டும்.