
வட மாநிலங்களில், தீபாவளி பண்டிகை, ‘தீவாலி’ எனக் கூறப்படுகிறது. மதம், மொழி, கலாசாரம் வேறுபட்டாலும், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருந்தாலும், அனைவராலும் வரவேற்கக்கூடிய, இந்திய மக்களின் பிரபலமான பண்டிகை எதுவென்றால், அது தீபாவளி ஆகும். வட மாநில தீவாலி (தீபாவளி) கொண்டாட்டம் குறித்த விஷயங்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராஜஸ்தான்: இங்கே தீவாலி பண்டிகை, வீர விளையாட்டை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. தீவாலியன்று, வேடுவ இனத்து மக்கள் வீர விளையாட்டுக்களையும், ராஜ புத்திரர்கள், ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தையும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
சௌராஷ்டிரம்: தீவாலியன்று, லெஷ்மி பூஜையை சிறப்பாக செய்த பின் புதிய கணக்கை எழுத ஆரம்பிப்பார்கள்.
பஞ்சாப்: தீவாலி தினத்தில்தான் சீக்கியர்களின் மத குருவாகிய குரு கோவிந்தசிங், ஜஹாங்கீரின் சிறையிலிருந்து விடுபட்டு அமிர்தசரஸ் வந்தார். அதனைக் கொண்டாடும் வகையில், தீவாலியன்று அமிர்தசரஸ் பொற்கோயிலில், தீப அலங்காரம் அழகாக செய்யப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசம்: தீவாலி தினத்தன்று, மாடுகள், எருதுகள் மற்றும் கன்றுகளை அலங்கரித்து வழிபடுவார்கள்.
மத்தியப் பிரதேசம்: தீவாலியன்று, இந்திரனின் பொக்கிஷதாரியான குபேரனை வழிபட்டு பூஜை செய்வது வழக்கம்.
வங்காளம்: தீவாலியை இங்கிருக்கும் மக்கள், ‘மகாநிசா’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அழிவுத் தொழிலை மேற்கொண்ட காளி தேவியின் உக்கிரத்தை, சங்கர பகவான் தணித்தார். அதனால், உக்கிரத்தை தணித்த நாளாக தீவாலி கொண்டாடப்படுகிறது. அன்று இளம் பெண்கள், தீபங்களை ஏற்றி ஆற்றில் விடுவது வழக்கம்.
நேபாளம்: தீவாலியை, நேபாள நாட்டு மக்கள், ‘தீஹார்’ என்ற பெயரில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் லெஷ்மி தேவி பூஜை முக்கிய இடம் பெறுகிறது.
மகாராஷ்டிரம்: தீவாலியன்று, மகாபலி சக்கரவர்த்திக்கு சிலை வைத்து பூஜை செய்கின்றனர். தீவாலி தினம், சூரிய பகவான், துலா ராசியில் நுழைகின்ற இந்நாளை, தாம்பூலம் போடும் நாளாக கொண்டாடுகின்றனர். தீபாவளிப் பண்டிகை மகாராஷ்டிராவிலும் ஐந்து நாட்கள், அதாவது தந்தேராஸ், சோட்டி தீபாவளி, தீபாவளி, கோவார்தன் பூஜை, பாய்தூஜ் என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
உபரி தகவல்கள்: உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இந்திய வம்சாவளிகள் தீபாவளியை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க்கில் தீபாவளி சமயம், பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், உடை அலங்கார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, இலங்கை என 80 சதவிகித நாடுகளில் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூட வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடியது அனைவரும் அறிந்தது. வெளிநாடுகளாகிய பர்மாவில் தாங்கிஜு, சைனாவில் நஹீம் ஹூபர், தாய்லாந்தில் வாய்கிரதோஸ், ஸ்வீடனில் லூசியா என வெவ்வேறு பெயர்களில் விளக்குகளை வரிசையாக ஏற்றி விமரிசையாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.