
கிரகங்களில் மங்கல கிரகமாக கருதப்படுபவர் செவ்வாய் பகவான். அதனாலேயே இதை வடமொழியில் மங்கல வாரம் என குறிப்பிடுகிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் செவ்வாய் கிழமை என்பது சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள் கிடையாது என்று ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அதேநேரம் துர்க்கை அம்மனுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் இவர்களை வணங்கி துவங்கும் எந்த செயல்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.
அதேபோல் உங்களுக்கு அதிகளவு கடன் தொல்லை இருந்தால் அதற்கு தீர்வு செவ்வாய் கிழமையில் உள்ளது. அதாவது, செவ்வாய்க்கிழமை அன்று நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
செவ்வாய் கிழமை செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள். இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர்.
திருமண தடை, குழந்தை பாக்கியம் வேண்டி பரிகாரம் செய்ய செவ்வாய் கிழமை உகந்த நாளாக கருதப்படுகிறது. எனவே தெய்வ வழிபாட்டிற்கு இந்த நாள் உகந்த நாளாக இருந்தாலும், மற்ற சில விஷயங்கள் செய்வதற்கு ஏற்றது அல்ல என்ற கருத்து நிலவி வருகிறது. நாள், கிழமை பார்த்து செய்கின்ற காரியம் பாதி வெற்றியை தரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் செவ்வாய் கிழமைகளில் கண்டிப்பாக செய்ய கூடாத சில விஷயங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
செவ்வாய் கிழமைகளில் வீட்டைச் சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, பூஜை பாத்திரங்களை கழுவுவது போன்ற வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சிலர் நம்புகிறார்கள். இப்படி செய்தால் வீட்டில் உள்ள செல்வம் வெளியில் போய்விடும் என்று சொல்லுவார்கள்.
இந்த நாளில் மொட்டை அடிப்பது, முடி வெட்டுவது அல்லது நகம் வெட்டுதல் போன்ற செயல்களை செய்தால் நீங்கள் அதிக சிரமங்களை சந்திப்பீர்கள் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய் கிழமையன்று கருமை நிற ஆடைகளை வாங்கவோ, அணியவோ கூடாது என்று கூறப்படுகிறது.
செவ்வாய் கிழமையில் யாருக்கும் பணம் கடனாக கொடுக்கக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில் இந்த கிழமையில் கடன் கொடுத்தால் பணம் திரும்ப வராது அல்லது பணத்தை திரும்ப பெற பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
சில ஜோதிட நம்பிக்கைகளின்படி, செவ்வாய் கிழமைகளில் மருத்துவமனைக்குச் செல்வது உகந்தது அல்ல என்று கருதப்படுகிறது. அப்படி செல்லும் பட்சத்தில் அது தொடர்ந்து அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய் கிழமைகளில் புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளைத் தொடங்குவது அல்லது வீடு கட்டும் வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும் என சில பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன.
ஒரு புதிய காரியத்தைத் தொடங்குவது செவ்வாய் கிழமைகளில் பலன் அளிக்காது அல்லது அது சரியான முறையில் அமையாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ கூடாது. இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதளவு சாப்பிட்டு சென்றால், நமது அனைத்தும் காரியங்களும் நன்மையாகவே அமையும்.
செவ்வாய் கிழமை என்பது பொதுவாக கிரகங்களின் எதிர்மறை விளைவுகளைக் கொண்டது என்று சில பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன, எனவே அந்த நாட்களில் நல்ல காரியங்களைச் செய்வதைத் தவிர்ப்பது நல்லது என்றும் இறைவழிபாடுகள் நன்மைகளை தரும் என்றும் பெரியவர்கள் வலியுறுத்துகின்றனர். இது போன்ற பழக்கவழக்கங்கள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவதால், சரியான காரணங்கள் தெரியாமலேயே பலரும் அவற்றைப் பின்பற்றி வருகின்றனர்.