மனம் உடைந்து ஒருவர் உதிர்க்கும் வார்த்தைகள் தான் சாபமாக மாறுகிறது. இவை மட்டுமல்ல நாம் செய்யும் சில செயல்களும் நமக்கு சாபத்தை அளிக்கும். இப்படியாக இந்துமதப்படி மொத்தமுள்ள 13 வகையான சாபங்கள் குறித்து விளக்கம் கொடுக்கிறது இந்தப் பதிவு.
உலகில் யாருக்குமே எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டாலே மற்றவர்களை அவமதிப்பது, கெடுதல் விளைவிப்பது மற்றும் ஏமாற்றுவது போன்ற செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால், இதையெல்லாம் உணராத மனிதர்கள் சிலர் கெட்ட செயல்களின் மூலம் சாபத்தை பெறுகின்றனர். எப்பேற்பட்ட பலவானாக இருந்தாலும், பாதாளத்தில் தள்ளும் சக்தி சாபத்திற்கு உள்ளது.
1. பெண் சாபம்:
சகோதரிகளை ஆதரவு தராததும், கட்டிய மனைவியைக் கைவிடுவதும், பெண்களை ஏமாற்றுவதும் பெண் சாபத்தை உண்டாக்கும். இந்த சாபத்தால் வம்சமே அழிந்து விடும்.
2. சர்ப்ப சாபம்:
பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதும், பாம்புகளைக் கொல்வதும் சர்ப்ப சாபத்திற்கு வழிவகுக்கும். இதன் காரணமாக கால - சர்ப்ப தோஷம் ஏற்பட்டு, நீண்ட நாள்களுக்கு திருமணத் தடை உண்டாகும்.
3. முனி சாபம்:
எல்லைச் சாமிகள், சிறு தெய்வங்களை மதிக்காமல் அவமதிப்பது மற்றும் பூஜைகளை மறப்பது போன்றவை முனி சாபத்திற்கு வழிவகுக்கும். இந்த சாபத்தால் செய்வினைக் கோளாறு உண்டாகும்.
4. பித்ரு சாபம்:
நம் முன்னோர்களுக்கு திதி செய்யாமல் இருப்பதும், தாத்தா பாட்டி மற்றும் தாய் தந்தையை அவமதிப்பதும் பித்ரு சாபத்தை உண்டாக்கும். இதனால், குடும்பத்தில் ஆண் வாரிசு பிறக்காது.
5. பிரம்ம சாபம்:
குருவை மறப்பதாலும், கற்ற வித்தையை தவறாகப் பயன்படுத்துவதாலும் பிரம்ம சாபம் ஏற்படும். இதனால் படிப்பு சரியாக வராது.
6. பிரேத சாபம்:
இறந்தவர்களின் உடலைத் தாண்டுவதும், அவமதித்துப் பேசுவதும், அடக்கம் செய்ய விடாமல் தடுப்பதும் பிரேத சாபத்திற்கு வழிவகுக்கும். இதனால் ஆயுள் பலம் குறையும்.
7. கோ சாபம்:
பசுக்களை வெட்டுவதும், பால் மரத்த பசுக்களை விற்பதும், பசுக்களின் தாகத்தைத் தீர்க்காமல் இருப்பதும் கோ சாபத்தை உண்டாக்கும். இதனால் குடும்பத்தில் எந்தவித வளர்ச்சியும் இருக்காது.
8. பூமி சாபம்:
பூமியில் தேவையில்லாமல் பள்ளம் தோண்டுவது, மற்றவர் நிலத்தை அபகரிப்பது, அடிக்கடி பூமியை காலால் உதைப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். இதனால் நரக வேதனை ஏற்படும்.
9. தேவ சாபம்:
தெய்வங்களை இகழ்ந்து பேசுவதும், பூஜைகளை பாதியில் நிறுத்துவதும் தேவ சாபத்திற்கு வழிவகுக்கும். இதனால் உறவினர்கள் பிரிந்து விடுவார்கள்.
10. விருட்ச சாபம்:
மரங்களை வெட்டுவதும், எரிப்பதும், மரம் சூழ்ந்த நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதும் விருட்ச சாபத்தை உண்டாக்கும். இதனால் நோய் மற்றும் கடன் ஏற்படும்.
11. கங்கா சாபம்:
அனைவரும் அருந்தும் தண்ணீரை அசுத்தம் செய்வதும், ஓடிக் கொண்டிருக்கும் நதி நீரை அசுத்தப்படுத்துவதும் கங்கா சாபத்திற்கு வழிவகுக்கும். இதனால், தண்ணீர் வேண்டி எவ்வளவு ஆழம் தோண்டினாலும் கிடைக்காது.
12. குலதெய்வ சாபம்:
முன்னோர்கள் வணங்கிய குலதெய்வத்தை மறந்து வேறு தெய்வங்களை வணங்குவது, வருடாந்திர பூஜைகளை செய்யாமல் இருப்பது, குலதெய்வ சாபத்தை உண்டாக்கும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி தொலைந்து, துக்கம் சூழ்ந்து விடும்.
13. ரிஷி சாபம்:
கலியுகத்தில் பக்தர்களையும், ரிஷிகளையும் அவமதிப்பது ரிஷி சாபத்திற்கு வழிவகுக்கும். இதனால் வம்சமே அழியும்.