ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில் 108 வைணவ திருக்கோயில்களில் ஒன்றாகும். இது நம்மாழ்வார் அவதாரத் தலம். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரியில் அமைந்துள்ளது ஆதிநாத சுவாமி கோயில். பிரம்மாவுக்கு குருவாக பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் இதை குருகூர் என்றும் கூறுவார்கள். ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்.
இந்தக் கோயிலில் கோவிந்த விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரது திருநாமம் ஆதிநாதன் பொலிந்து நின்ற பிரான். ஆதிநாதவல்லி குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள்.
குருகு என்றால் பறவை, சங்கு என பல பொருள்கள் உண்டு. இத்தலத்தில் உள்ள பெருமாளை சங்கன் எனும் சங்குகளின் தலைவன் வழிபட்டதால் இத்தலம் குருகூர் எனப் பெயர் பெற்றது.
பிரளய காலம் முடிந்த பின் தோன்றிய முதல் தலம் என்பதால் ஆதிக்ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன் திருபுளி ஆழ்வாராக இங்கு அவதரித்ததால் இந்தத் தலம் சேஷ க்ஷேத்ரம் எனப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகவும் ராமாயணத்தில் லக்ஷ்மணனின் அவதாரமாக தோன்றியவர் திருப்புளி ஆழ்வார். இவர் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக தவம் மேற்கொள்வதற்காக அங்கு நின்றார். அந்தப் புளியமர பொந்தில் நம்மாழ்வார் இருந்தார். இந்தப் புளிய மரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. புளிய மரத்திற்கும் சன்னிதிக்கும் பூஜை உண்டு.
புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேச பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்த புளியமரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த புளியமரம் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. நம்மாழ்வார் உத்ஸவ விக்ரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டது இல்லை. தாமிரபரணி தண்ணீரினை காய்ச்ச காய்ச்ச முதலில் உடையவர் விக்ரகமும் பின்னர் நம்மாழ்வார் விக்ரகமும் வெளிவந்துள்ளது. இத்தலத்தை சுற்றி எட்டு திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து நவதிருப்பதி என இத்தலம் அழைக்கப்படுகிறது.
நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஆதலால், இத்தலத்தில் வைகாசி விசாக பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில் ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப்பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது. வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து கோயிலில் கொடியேற்றப்படும். இந்தத் திருவிழாவின் ஐந்தாம் நாள் உத்ஸவம் முக்கியத்துவம் பெற்றது. அன்றைய விழாவில் ஆழ்வார்திருநகரியை சுற்றியுள்ள எட்டு திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள் பல்லக்கில் ஆழ்வார்திருநகரி வந்தடைவார்கள். ஆதிநாதர் கோயில் முற்றத்தில் நவதிருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும். இரவு பதினொரு மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வருக்குக் காட்சி தருவார்.
ஆதிநாதர் கோயில் வாசல் பந்தலில் நவதிருப்பதி பெருமாள்களும் ஒவ்வொருவராக எழுந்தருள்வார்கள். ஆழ்வார் அந்தந்த பெருமாளை பிரதட்சணமாக வந்து அவர்கள் மீது தாம் அருளிச் செய்த திருவாய்மொழி பாசுரங்களைப் பாடுவார். ஆழ்வார் பாடியதை இன்று அரையர் தாளத்துடன் பாடுவார். ஒவ்வொரு பெருமாளும் ஆழ்வாருக்கு தகுந்த மரியாதைகள், தீர்த்தம், சடகோபன் சந்தனம் மாலை, பரிவட்டம் அருளுகின்றனர்.
இரவு ஆழ்வார் ஹம்ச வாகனத்திலும் அவரது உத்தம சீடர் மதுரகவி ஆழ்வார் பிறங்கி நாற்காலியிலும் ராஜகோபுரத்திற்கு வெளியே எழுந்தருளி கருடன் மீது ஆரோகணித்து வரும் நவ திருப்பதி பெருமாளை வரவேற்க காத்திருப்பார்கள்.
ஆழ்வார் திருநகரியில் எப்பொழுதுமே கருடனுக்கு தனி சிறப்பு உண்டு. கோயில் மதில் மேல் வடகிழக்கு மூலையிலுள்ள கருடாழ்வாருக்கு ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்திற்கு திருமஞ்சனம் நடக்கிறது.