கோடை வெயில் தற்போது சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வேளையில் கை கொடுத்து உதவக்கூடிய பழம்பாசி இலைகளைப் பற்றி தெரிந்து கொள்வதும் அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதும் மிகவும் அவசியம்.
பழம்பாசி ஒரு சிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பூக்கள் நல்ல மஞ்சள் நிறத்திலும், ஐந்து இதழ்களைக் கொண்டதாகவும் இருக்கும். நிலத்துத்தி என்றும் இதனை அழைக்கிறார்கள். இது எல்லா வகை நிலங்களிலும் வளரக்கூடியது. தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளரக்கூடிய இதன் இலைகள் உஷ்ணத்தை போக்கக்கூடிய சிறந்த மருந்தாகும்.
உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய அனைத்து உபாதைகளுக்கும் இந்த பழம்பாசி சிறந்த பலனைத் தரும். பழம்பாசி இலைகளை பவுடராக்கி இத்துடன் சீரகத்தூள், வெந்தயத்தூள் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் அளவில் அரை கப் மோரில் கலந்து சாப்பிட உடல் உறுப்புகளில் உள்ள அத்தனை உஷ்ணமும் நீங்கிவிடும். சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் நீர் கடுப்பு ஆகியவற்றை சரி செய்வதோடு சிறுநீரும் தாராளமாகப் பிரியும்.
என்னதான் ஆங்கில மருத்துவம் அதிகமாக புழக்கத்தில் இருந்தாலும், சளி, இருமல் தொடங்கி இதய நோய் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கை மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில் இந்த பழம்பாசி பெண்களின் பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கொடுக்கப்படும் தசமூலாரிஷ்டம் (10 விதமான மூலிகைகள்), ஜீரகாரிஷ்டம் போன்ற கஷாயங்களில் இதன் வேர் முக்கிய இடம் பெறுகிறது.
எளிதில் கிடைக்கும் இந்த இலைகளை விழுதாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு, வேர்க்குரு, வேனல் கட்டிகள் போன்றவை நீங்கும். பெண்களுக்கு அதிக உடல் சூட்டினால் ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு இந்த பழம்பாசி இலைகளை கைப்பிடி அளவு எடுத்து நீரில் அலசி அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சரியாகும்.
கடுமையான வெயிலின் காரணமாக ஏற்படும் உடல் சூட்டினால் உண்டாகும் வயிற்றுப்போக்கு மற்றும் உஷ்ண கட்டிகளுக்கும் இதனை எடுத்துக்கொள்வது சிறந்த பலனைத் தரும். மூலச்சூடு எனப்படும் மூல வியாதிக்கு இதன் இலைகளை சுத்தம் செய்து பாலில் வேகவைத்து வடிகட்டி அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருக விரைவில் குணமாகும். இந்த மூலிகைச் செடி இலைகள், வேர் என அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது. இது இரத்த சோகையை குணப்படுத்தும். உஷ்ணக் கட்டிகளை குணமாக்கும். ஊளைச்சதையே குறைத்து உடலை பிட்டாக வைத்துக்கொள்ள உதவும். இதன் வேர்களை விளக்கெண்ணையில் போட்டு சூடு பண்ணி அந்த எண்ணையை நீண்ட நாட்களாக ஆறாத புண்களில் தடவி வர விரைவில் குணமாகும்.