
கங்காள மூர்த்தி என்பது 63 சிவ திருமேனிகளுள் ஒன்றாக வணங்கப்படும் வடிவமாகும். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக்கொண்ட கோலமே கங்காள மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. கங்காளம் என்றால் எலும்பு என்று பொருள்.
அந்தக் காலத்தில் வீடுகளில் எல்லாம் கங்காளம் என்ற பெரியதொரு பாத்திரம் இருக்கும். நிறைய தண்ணீரோ அல்லது அதிக அளவு சமைக்கவோ இதனை பயன்படுத்துவார்கள். பாத்திரத்தின் இரு பக்கமும் வளையம் போன்ற காதுகளில் கம்பைச் செருகி காவடி போல் எடுத்துச் செல்லவும் பயன்படும். இவற்றில் சிவலிங்கம், நந்தி போன்றவற்றை அமைத்திருப்பார்கள்.
கங்காளர் வடிவமும் பிச்சாண்டவர் வடிவமும் சில இடங்களில் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும் அவை வெவ்வேறான வடிவங்களாகும். திருவாரூர் மாவட்டம், திருவிற்குடிக்கு அருகே கங்களாஞ்சேரி என்னும் ஊரில் கங்காள வழிபாடு இருந்ததற்கான அடையாளமாகச் சொல்லப்படுகிறது. விரிஞ்சிபுரம், சுசீந்திரம், திருச்செங்காட்டாங்குடி, தென்காசி, தாராசுரம், திருநெல்வேலி போன்ற ஊர்களில் கங்காள மூர்த்தியின் சிற்பங்களைக் காண முடியும்.
அம்பாசமுத்திரம் பக்கத்தில் பிரம்மதேச சிவாலயத்தில் கங்காள மூர்த்தி உள்ளது. உள்ளே அஷ்டதிக் பாலகர்கள், அப்சரஸ் ஸ்த்ரீகள், அன்ன வாகனத்தில் பிரம்மா, கருட வாகனத்தில் விஷ்ணு, நாரதர், அகஸ்தியர், சூரிய சந்திரர் மற்றும் வாத்தியங்களுடன் கின்னரர் கிம்புருடர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
கங்காள மூர்த்தி சீர்காழியில் உள்ள கோயிலில் சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் பெயர் பெரிய நாயகி. சிவன் கோயிலில் அணையும் தருவாயில் இருந்த விளக்கின் திரியை எலி ஒன்று தன்னுடைய வாலால் உயர்த்த அந்தப் புண்ணியத்தின் பயனாக மகாபலி மன்னனாகப் பிறவி எடுத்தது.
அசுர குலத்தின் மன்னனாக விளங்கிய மகாபலி தான தர்மங்களிலும், யாகங்கள் இயற்றுவதிலும் சிறந்தவனாக விளங்கினான். மகாபலியின் தவப் பயனால் அசுர குலத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்ததைக் கண்ட தேவர்கள், மகாபலி மன்னனுடன் போரிட்டு தோல்வியைத் தழுவியதும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி காசியப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அவர்களுக்கு மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால்.
மகாபலி செய்யும் யாகத்தின் பொழுது வாமனர் மூன்றடி மண் கேட்க, ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும், மூன்றாவது அடிக்கு மகாபலியின் தலையின் மேல் கால் வைத்து பாதாள லோகத்தில் மகாபலியை அழுத்தினார். மகாபலியை ஆட்கொண்ட திருமால், மிகவும் கர்வம் கொண்டு தேவர்களையும் மனிதர்களையும் வம்புக்கு இழுக்க தேவர்குலம் சிவபெருமானை வேண்டி நின்றது.
ஈசன் வாமனரை சந்தித்து அமைதிகொள்ள வேண்ட, கர்வம் அடங்காத திருமாலுக்கு பாடம் புகட்ட எண்ணி தன்னுடைய திருக்கை வஜ்ர தண்டம் எடுத்து வாமனன் மார்பில் அடித்தார். வாமனன் நிலத்தில் வீழ்ந்தார். அவரது தோலை உரித்து மேல் ஆடையாக்கி, முதுகெலும்பினைப் பிடுங்கி தண்டாக கையில் தரித்துக் கொண்டு தேவர்கள் துயர் துடைத்தார். ஈசனிடம் வாமன அவதாரத்தின் நோக்கம் கூற, மகாவிஷ்ணு வைகுண்டம் சென்றார். மகாபலி மன்னன் மோட்சம் அடைந்தான். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக்கொண்ட கோலமே, ‘கங்காள மூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது.