
நாம் பேச்சு வழக்கில் சொல்லும்பொழுது சப்த மாதர்கள், சப்த கன்னியர்கள் இரண்டையும் ஒன்றாகத்தான் நினைத்துக் கூறுகிறோம். புராணங்கள் போற்றும் சப்த மாதர்களும் சரி, கிராமிய தெய்வமான கன்னிமார்களும் சரி ஏழு பேர் கொண்ட தொகுதிதான் அவர்கள். இது அவர்களுடைய ஒற்றுமை. ஆனால், அனேக வேற்றுமைகள் இவர்களுக்குள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
சப்த கன்னியர் அல்லது சப்த மாதர் என்று அழைக்கப்படுபவர்கள் பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஆவர்.
சப்த மாதர், கன்னியர்களை வழிபாடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
கலை, கல்வி, சாந்தம் பெருக, குழந்தைப் பேற்றுக்கு, எதிரிகளை வெல்லுவதற்கு, எல்லாவிதமான தடைகளை போக்குவதற்கு, செல்வம் தழைக்க, திருமணம் இனிதே நடைபெற இத்தெய்வங்களை வணங்குகிறார்கள். காளிதாசனின் குமார சம்பவத்தில் சப்த கன்னியர் சிவனின் பணிப் பெண்டிர் என்ற குறிப்பு உள்ளது.
சப்த மாதர் வழிபட்ட தலங்கள்: பிராம்ஹி - சக்கரமங்கை அய்யம்பேட்டை என்ற ஊரில் உள்ளது, மகேஸ்வரி -அரியமங்கை கௌமாரி – சூலமங்கலம், வைஷ்ணவி –நல்லிச்சேரி, வாராகி - பசுபதி கோயில் இந்திராணி – தாழமங்கை, சாமுண்டி – திருப்புள்ளமங்கை. அசுரர்களின் இரத்தம் நிலத்தில் விழாதபடி தடுப்பதற்காக ஆண் தெய்வங்களால் உருவாக்கப்பட்டவர்கள் சப்த மாதர்கள் என்பது புராணம்.
சப்த மாதர்கள் தெய்வ நிலையில் தோன்றியவர்கள். நான்கு கரங்களுடன் இருப்பவர்கள். அந்த கைகளில் போர் கருவிகளை ஏந்தியவர்கள். இவர்கள் வடக்கு நோக்கி கோயில் கொண்டிருப்பவர்கள். இவர்கள் சன்னிதியின் முன்னே சிங்கம் அல்லது வேதாளம் இருக்கும். சப்த மாதர்கள் தனியாக இருக்க மாட்டார்கள். இவர்களின் வரிசையில் ஒரு புறம் விநாயகர் மேற்கு நோக்கியும், வீரபத்திரர், சாஸ்தா, யோகசிவன் ஆகிய மூவரில் ஒருவர் கிழக்கு நோக்கியும் அமர்ந்து இருப்பர்.
சப்த மாதர்கள் ஆலயத்தில் தன்னைத்தானே தலையை வெட்டிக்கொண்டு ரணவீர பலி அளித்த வீரர்கள் (நவகண்ட வீரர்கள்), அரசர்களின் சிலைகள் இருக்கும். மேலும் இந்த ஆலயங்களில் யானை, குதிரைகள் அமைக்கப்படுவதில்லை. அன்னை பராசக்தியின் பஞ்சவர்ணத்திலும் யாகசாலைகளிலும் துணை தெய்வங்களாக சப்த மாதர்கள் பூஜை செய்யப்படுகின்றனர்.
கிராம தேவதைகளாகவும், ஆலய பரிவாரங்களாகவுமே சப்த மாதர்கள் இருப்பர். அவர்களைக் குலதெய்வமாகப் போற்றிக் கொண்டாடி வழிபடும் வழக்கம் இல்லை. இவர்களை ஆண் துணையோடு வைதீக முறைப்படி பிற்காலத்தில் வணங்க ஆரம்பித்தனர்.
சப்த கன்னிமார்கள்: கன்னிமார்கள் இரண்டு கரங்களுடன் இருப்பவர்கள். ஒரு கையில் மலர் ஏந்தி, மறு கையைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் பொதுவாக கிழக்கு நோக்கியும் அபூர்வமாக தெற்கு நோக்கியும் கோயில் கொண்டிருப்பர். கன்னிமார்கள் எப்போதும் தனியாக ஒரே வரிசையில் இருப்பார்கள்.
கன்னிமார் ஆலயங்களில் வெளியே பரிவாரமாக அண்ணன்மார்கள் எனப்படும் ஏழு வீரர்களின் உருவத்தைக் காணலாம். இவர்கள் கத்தி, கேடயம் ஏந்திய வீரர்களாகவோ அல்லது இவர்களின் ஏழு தலைகள் மட்டுமே கூட அமைக்கப்பட்டிருக்கும். கன்னிமார்கள் கோயில் முற்றத்தில் புலிகள் நேராகவும் பக்கவாட்டில் யானை, குதிரைகளும் அமைக்கப்பட்டு இருக்கும்.
கன்னிமார்களை பெருந்தெய்வங்களுக்குப் பரிவாரங்களாக அமைத்து வழிபடும் வழக்கம் இல்லை. இவர்கள் பல கோடி மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகின்றனர். கன்னிமார்களின் வழிபாடு தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வருகிறது. இவர்கள் திருமணம் ஆகாத கன்னிமார்களாக வழிபடப்படுவதால் இவர்களுக்கு இணையான ஆண் தெய்வம் இல்லை. அதேபோல், தனித் தனி பெயர்களும் இல்லை. இதுபோல் சப்த மாதர் மற்றும் சப்த கன்னியர்களுக்கு வேறுபாடுகள் இருப்பதை அறியலாம்.