கோ என்றால் பசு, குலம் என்றால் கூட்டம். எனவே, இவர்கள் வாழும் ஊர் கோகுலம். அதாவது, ஆயர்பாடி. அதைப் பராமரிப்பவர்கள் ஆயர் இனத்தவர்கள். ஆக்ரா, மதுரா சேர்ந்த தற்போதைய வடமதுரை பிரதேசம்தான் பழைய கோகுலம். அவர்கள் இந்தியின் கிளை மொழியை இலக்கிய வளம் மிக்க வ்ரஜ மொழியைப் பேசினர். எனவே, அந்த பூமி ‘வ்ரஜ பூமி’ எனப்படுகிறது. ஒரு சமயம் கோகுலவாசிகள் மழை வேண்டி கோவர்த்தன கிரியை பூஜித்தனர். தன்னை வணங்காமல் கோவர்த்தன கிரியை வணங்கியதால், தேவர்களின் தலைவனான இந்திரன் இரவு பகலாக ஏழு நாட்கள் கடும் மழையை பொழிவித்தான்.
எங்கும் வெள்ளம், விடாத மழை. ஆகவே, கண்ணன் கோவர்த்தன மலையினை பெயர்த்து மக்கள் மற்றும் பசுக்களுக்குக் குடையாகப் பிடித்து அவர்களைக் காத்தான். அதனால்தான் கண்ணன் ‘கோவர்த்தன கிரிதாரி’ எனப்பட்டான். இன்றும் அங்கு கோவர்தனகிரி பூஜை நடத்தப்படுகிறது. தீபாவளி திருநாளைத் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது இந்த பூஜை. கிரிராஜன்தான் மணமகன். தீபாவளியே மணமகள். அவர்களின் திருமண நாளே அது. அன்றைய தின விருந்துக்குப் பெயர் அன்னக் குவியல். அதை ஏற்படுத்தியவர் வல்லபாச்சாரியார். அத்தினத்தில் 56 வகையான உணவு பண்டங்கள் அல்லது 108 வகையான பண்டங்கள் படைக்கப்படும். இதற்கு ‘சப்பன்போக்’ என்று பெயர்.
இந்தியில் சப்பன் என்பது 56 என்ற எண்ணைக் குறிக்கும். ‘போக்’ என்றால் போஜனம் அல்லது உணவு. அதில் சமைக்கப்பட்டது, சமைக்கப்படாது, சர்க்கரை சேர்த்தது, சேர்க்கப்படாதது, பாலில் செய்தது, கிழங்கு வகைகள் சில புதிய பழங்கள் வளர்ந்த பழங்கள் என்று பலவித பண்டங்கள் இருக்கும். எல்லாம் அறுசுவை உணவு. அதேபோல், விழுங்குபவை, கடித்துத் தின்பவை, சப்பி சாப்பிட வேண்டியவை, நக்கி சாப்பிடுபவை இப்படி பலவிதமான தயாரிப்புகள் அடங்கியது. இந்த சப்பன் போக் போஜனத்துடன் இன்றும் கோகுலத்தில் இந்த பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.
வீட்டு முற்றத்தில் பசுவின் சாணத்தால் கோவர்த்தன பர்வதத்தின் உருவம் செய்து அதைச் சுற்றி வலம் வருவார்கள். அதன் பிறகு கிருஷ்ணருக்கு அன்ன கூட் பிரசாதம் வழங்கப்படுகிறது. இன்று கோவர்த்தன் கடவுளை வழிபடுவதால் செல்வம், சந்ததி செழிப்பு அதிகரிக்கும். துவாபர யுகம் முதல் நடைபெற்று வரும் கோவர்த்தன பூஜையின் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. இந்த நாளில் பசுக்களின் சேவை சிறப்பு வாய்ந்தது. நமது சாஸ்திரங்களில் பசு லட்சுமி தேவியின் வடிவம் என்று கூறப்பட்டுள்ளது. பசு தனது பால் மூலம் நமக்கு ஆரோக்கிய செல்வத்தை வழங்குகிறாள்.
கோவர்த்தன் மலை இந்தியாவின் முக்கியமான யாத்திரை தலமாகும். உத்தரபிரதேசத்தின் மதுரா நகரில் கோவர்த்தன் மலை அமைந்துள்ளது. கிருஷ்ணரை போலவே இதுவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்துக்கள் பலரும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் உலகின் பிறப்பகுதியில் இருந்தும் கோவர்த்தன மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். அவர்கள் கோவர்த்தனத்தை வலம் வந்து தேவி ராதை மற்றும் பகவான் கிருஷ்ணருக்கு மரியாதை செலுத்துகிறார்கள். இந்து மதத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கோவர்த்தன் பூஜை, இடி மற்றும் மழையின் இறைவன் இந்திரனால் ஏற்படும் மழையில் இருந்து மக்களைக் காக்க கண்ணனால் கோவர்த்தன மலையை தூக்கியதை நினைவுபடுத்துகிறது.
கோவர்த்தன் மலை ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய மலையாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அது சூரியனை மறைக்கும் அளவுக்குப் பெரியதாக இருந்ததாக கூறப்படுகிறது. துவாபர யுகத்தில் இந்த மலையை தனது சுண்டு விரலில் தாங்கி இந்திரனின் கோபத்திலிருந்து மக்களை காப்பாற்றினார் பகவான் கிருஷ்ணர். கோவர்த்தன் மலையை ‘கிரிராஜ் மலை’ என்றும் அழைப்பார்கள். இந்த மலையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அளவு குறைகிறது என்று ஒரு மத நம்பிக்கை உள்ளது. கோவர்த்தன மலையின் அளவு இழந்ததற்கு பின்னால் ஒரு பரபரப்பான கதையும் உள்ளது. இது வெறும் அங்கீகாரம் மட்டுமல்ல, 5000 ஆண்டுகளுக்கு முன்பு கோவர்த்தனை மலை 30,000 மீட்டத்தில் மீட்டர் உயரத்தில் இருந்ததாகவும் இப்போது இந்த மலை 30 மீட்டர் உயரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். புலஸ்திய முனிவரின் சாபமே மலையின் அளவு நாளுக்கு நாள் குறைய காரணம் என்கிறார்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த கோவர்த்தன மலையை தீபாவளி தொடர்ந்து வரும் நாளில் பூஜை செய்து கொண்டாடுகிறார்கள் மக்கள்.