Do you know about Parvathamalai who did penance for Ambal Isaan?
Do you know about Parvathamalai who did penance for Ambal Isaan?

அம்பாள் ஈசனைக் குறித்துத் தவம் செய்த பர்வதமலை பற்றி தெரியுமா?

Published on

யிலாயத்தில் வீற்றிருந்த பார்வதி தேவி, சிவபெருமானிடம், `பூமியில் பிறக்கும் மனிதா்கள் அறம், பொருள், இன்பம், வீடு பேறு அடைய சிறந்த தலம் ஏதும் உள்ளதா?' என்று கேட்டாள். அதற்கு சிவபெருமான் கைகாட்டிய மலையே, பர்வதமலை. இதையடுத்து, பார்வதி தேவி இந்த மலைக்கு வந்து தவம் செய்து இறைவனின் அருளைப் பெற்றாள். பார்வதி அன்னை தவம் புரிந்ததாலேயே இது, `பார்வதிமலை' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் `பர்வதமலை' என்றானதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள அம்பாள், `பிரம்மராம்பிகை' என்ற பெயருடன் வீற்றிருக்கிறாள்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி என்ற இடத்தில் இருந்து தொடங்குகிறது பா்வதமலை. சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட இந்த மலையின், செங்குத்தான பாறைகளின் உச்சியில் கோயில் அமைந்துள்ளது. கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் தென்பகுதிக்கு வந்தபோது, அவரது காலடி பட்ட முதல் இடம் இது என்று சொல்லப்படுகிறது.

ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றபோது, அதில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதியே இந்த பா்வதமலை என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. இதற்குச் சான்றாக, இங்கே ஏராளமான மூலிகைச் செடிகள் நிறைந்திருக்கின்றன. கயிலாய மலையை தரிசிக்க இயலாதவா்கள், இந்த மலையை தரிசித்து வழிபட்டாலே கயிலாயத்தை வழிபட்ட பலனை அடைந்துவிட முடியும்.

இந்த மலை உச்சியை அடைய, செங்குத்தான பாறை மற்றும் பாறைகளால் ஆன படி, ஏணிப்படி, கரடு முரடான பாதை என சுமார் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு மலை ஏற வேண்டும். இந்த ஆலயத்திற்கு கதவுகளே கிடையாது. கோயிலுக்கு அர்ச்சகரும் இல்லை. இங்குள்ள பிரம்மராம்பிகை பேரழகுடன் வீற்றிருப்பதைக் காணலாம்.

மலையின் உச்சியில் மிகப்பெரிய திரிசூலம் ஒன்று உள்ளது. மலை அடிவாரத்தில் பச்சையம்மன் கோயில் இருக்கிறது. இதன் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளி அம்பிகையை வழிபடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ராகுகால துர்கை வழிபாட்டுப் பலன்கள்!
Do you know about Parvathamalai who did penance for Ambal Isaan?

சித்ரா பௌர்ணமி, ஆடிப்பூரம், ஆடிப்பதினெட்டு, கார்த்திகை தீபம் போன்றவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேக, ஆராதனை செய்தால் வருடம் முழுவதும் பூஜை செய்த பலன் கிடைக்கும். பர்வத மலையில் அமர்ந்து தியானம் செய்தால், அவா்களுக்கு அம்பிகை ஞானத்தை வழங்குவாள். இங்கு விநாயகர், முருகன், ஆஞ்சனேயர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. பௌர்ணமி நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com