மோகினி அவதாரத்தில் காட்சி தரும் பெருமாள் கோயில் பற்றி தெரியுமா?

Lord Chennakeshava temple
Lord Chennakeshava templeImage Credits: Images WorthvieW

காவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து என்றாலும், அதில் குறிப்பிடப்படாத ஒரு அவதாரம்தான் மோகினி அவதாரமாகும். அத்தகைய அவதாரக் கோலத்தில் ஒரு திருத்தலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். அந்தக் கோயிலை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

கர்நாடக மாநிலம், பேலூரில் அமைந்துள்ள ஸ்ரீ சென்னகேசவப்பெருமாள் திருக்கோயில்தான் இத்தகைய பெருமையைக் கொண்ட கோயிலாகும். ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில் கிழக்கு நோக்கியபடி உள்ளது. இதன் வலது பக்கத்தில் கட்பே சென்னகேசவர் சன்னிதியும், இடது புறத்தில் மகாலட்சுமி சன்னிதியும், பின்புறத்தில் ஆண்டாள் சன்னிதியும் அமைந்துள்ளன.

இங்குக் காணப்படும் இரண்டு தூண்கள் விஜய நகரத்து காலத்தையும், மற்றொன்று ஹொய்சால பேரரசு காலத்தையும் சேர்ந்ததாகும். இதுவே முதல் ஹொய்சால கோயிலாக இருந்தாலும், இதன் கட்டடக்கலை சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்ததாகவே உள்ளது.

இக்கோயிலில் அமைந்துள்ள மேற்கூரையில் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது கண்களைக் கவர்வதாக உள்ளது. விஜயநாராயணர் கோயில் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட சென்னகேசவப்பெருமாள் கோயில், ஹொய்சால பேரரசின் தலைநகராக விளங்கிய பெல்லூரில் யாக்காச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள ராஜகோபுரம் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதால் தமிழக ராஜகோபுரம் போலவே அமைந்துள்ளது.

ஒரு சமயம் அசுரனின் தலைவனான பஸ்மாசுரன் என்பவன் சிவபெருமானை வணங்கி அவரிடம், ‘தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பொசுங்கிப் போக வேண்டும்’ என்னும் வரத்தைப் பெற்றான். அதை சோதித்துப் பார்க்க சிவபெருமானையே துரத்திச் சென்றான். அப்போது பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து தனது அழகால் அவனை மயக்கி அவன் தலையிலேயே அவனை கையை வைக்கச் செய்து அவனை அழித்தார். அதனால் இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்தில் மோகினி அவதாரத்தில் தினமும் காட்சியளிக்கிறார். இங்குள்ள மூலவர் 15 அடி உயரத்தைக் கொண்டவர். இச்சிலையின் முகத்தில் பெண்மையின் எழிலும், கண்களில் அருளும் இழையோடுகிறது. இவர் மூக்குத்தியும், கொலுசும் அணிந்திருக்கிறார். சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஆகியவற்றை வைத்துள்ளார். மூலவரின் பின்புறத்தில் பெருமாள் பாதம் உள்ளது.

தசாவதாரக் காட்சிகள், மகிஷாசுரமர்த்தினி, லக்ஷ்மி நாராயணர், சரஸ்வதி, உக்கிர நரசிம்மர் போன்ற அழகிய கலைநயமிக்க சிற்பங்கள் இக்கோயிலில் காட்சியளிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சித்தர்கள் அருளிய மூலிகை சாம்பிராணி செய்ய என்னென்ன பொருட்கள் தேவை தெரியுமா?
Lord Chennakeshava temple

கட்பே சென்னகேசவர் சிலை செய்யும்போது தேரை ஒன்று அந்தக் கல்லில் இருந்து வெளியே வந்ததால் இவருக்கு இந்தப் பெயர் வந்ததாம். ‘கட்பே’ என்றால் தேரை என்றும் ‘கேசவர்’ என்றால் தடைகளை நீக்குபவர் என்று பொருள். இக்கோயில் கோபுரக் கலசத்தை காண்பதால் சாப விமோசனமும், சென்னகேஸ்வரரை தரிசிப்பதால், பாப விமோசனமும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி போன்றவை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, இக்கோயிலுக்கு ஒருமுறை சென்று பெருமாளை தரிசனம் செய்து வருவது சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com