
தண்டு மாரியம்மன் கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் கொண்டாடப்படும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது.
மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் பிரிட்டீஸை எதிர்ப்பதற்காக தனது படை வீரர்களுடன் கோயம்புத்தூர் கோட்டையில் ஒரு கூடாரம் அமைத்து தங்கியிருந்தார். அதில் ஒரு படைவீரர் தீவிரமான அம்பாள் பக்தர். ஒருநாள் அவரின் கனவில் தோன்றிய அம்பாள் தான் வேப்பமரத்தின் இடையிலே இருப்பதாகவும் தன்னை அங்கேயே வைத்து வழிப்பட வேண்டும் என்றும் சொல்லிவிட்டு மறைகிறார்.
அடுத்தநாள் அந்த படைவீரர் தன் நண்பர்களுடன் சென்று அந்த இடத்தில் தேடிப் பார்க்கிறார். அப்போது வேப்பமரத்திற்கு இடையிலிருந்து அம்பாள் வெளிப்படுகிறாள். அந்த இடத்திலேயே அம்பாளுக்கு ஒரு சிறிய மேடை அமைத்து வழிப்பட்டு வந்தார். இன்றைக்கு அந்த கோவில் மிகப்பெரிய கோவிலாக உயர்ந்து நிற்கிறது. அதுதான் தண்டு மாரியம்மன் கோவில்.
‘தண்டு’ என்றால் படை வீரர்கள் தங்கியிருக்கும் கூடாரம் என்று பொருள். அந்த காலத்தில் காலரா, அம்மை, பிளேக் போன்ற கொடிய நோய் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அப்போது மக்கள் தண்டு மாரியம்மனை நம்பி வந்தார்கள். தன்னை நாடி வரும் பக்தர்களின் நோயை அன்னை வேப்பிலையிலும், தீர்த்தத்திலும் கலந்து அருள் செய்தாள்.
அவையெல்லாம் பக்தர்களின் மேனியில் பட்டதும் நோயின் வேகம் குறைந்தது. மக்கள் நோயின்றி சிறப்புடன் வாழ்ந்தார்கள். தன்னை நாடிவரும் அனைவருக்கும் வேண்டிய அனைத்தையும் கொடுத்து கருணைக்கடலாய் தண்டு மாரியம்மன் அருள்பாலித்து வருகிறார். தீராத நோய்களையும் தீர்ப்பதில் வல்லவள் தான் தண்டு மாரியம்மன்.
தண்டு மாரியம்மனுக்கு 13 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழாவின் போது சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெறும். இக்கோவிலில் கற்பூரம் ஏற்றப்படுவதில்லை.
தண்டு மாரியம்மனுக்கு நான்கு கரங்கள். மேல் இரண்டில் கதையும், கத்தியும் மற்றும் கீழ் இரண்டு கரங்களில் சங்கும், அபய முத்திரையுடனும் அருள்பாலிக்கிறார். தனது இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டப்படி அன்னை காட்சியளிக்கிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது நன்மையைத் தரும்.