கருட தரிசனம் கிடைத்தால் மிகவும் அதிர்ஷ்டம் என்று சொல்லப்படுகிறது. கருடன் மகாவிஷ்ணுவின் வாகனமாவார். எனவே, கருடனை வானத்தில் பார்ப்பது நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. இந்தப் பதிவில் கருட தரிசனத்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி காண்போம்.
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனம் உண்டு. சிவபெருமானுக்கு நந்தி, முருகருக்கு மயில், விநாயகருக்கு மூஷிகம் ஆகியவை இருப்பது போல மகாவிஷ்ணுவிற்கு கருடன் வாகனமாக உள்ளார். இவரை ‘பெரிய திருவடி’ என்றும் குறிப்பிடுவார்கள்.
கோயில்களில் கும்பாபிஷேகம் நடக்கும்போது கருடன் வானத்தில் வட்டமிடுவதைப் பார்த்திருப்போம். அதற்கான காரணம் என்ன தெரியுமா? ‘கருடர், கோயில்களில் சொல்லப்படும் வேதங்கள் நல்ல முறையில் சொல்லப்படுகிறதா?’ என்பதைப் பார்வையிடுவதற்கு வருகிறார் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாகும். ஆயிரம் சுப சகுனங்களைக் காட்டிலும் ஒரு கருட தரிசனம் மேலானதாகக் கூறப்படுகிறது.
கருடனை தரிசிப்பதால் நமக்கு வரும் கெட்ட சகுனங்கள் விலகும், எதிர்மறை எண்ணங்கள் மறையும், எதிரிகள் தொல்லை ஒழியும், நேர்மறை எண்ணங்கள் உருவாகும், நல்ல புத்திகூர்மையும், மனதில் நல்ல சிந்தனை அதிகரிக்கும்.
கருட தரிசனம் கிடைப்பது எளிதான விஷயமில்லை. ஒருவேளை கருட தரிசனம் கிடைத்தால், 'மகாவிஷ்ணுவே வந்து நீங்கள் செய்யப்போகும் காரியத்தில் வெற்றி பெறவிருப்பதாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு சமம்' என்று சொல்லப்படுகிறது.
எந்தக் கிழமையில் கருட தரிசனம் கிடைத்தால் என்ன பலன் தெரியுமா? ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் கண்டால் நீண்ட நாட்களாக இருந்து வரும் நோய்கள் தீரும். திங்கட்கிழமை கருட தரிசனம் கிடைத்தால், குடும்பத்தில் நலம், செல்வம், மேன்மை அதிகரிக்கும். செவ்வாய்கிழமை கருடனை தரிசித்தால், மன வலிமை, மன உறுதி, தைரியம் அதிகரிக்கும். புதன்கிழமை கருடனை தரிசிப்பதன் மூலமாக எதிரிகள் தொல்லை விலகும்.
உங்களுக்குக் கெடுதல் செய்ய நினைப்பவர்கள் உங்கள் வாழ்க்கையை விட்டு சீக்கிரம் விலகிப்போவார்கள். வியாழக்கிழமை கருட தரிசனம் கிடைத்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும், உடலில் உள்ள நோய்கள் பூரண குணமாகும். வெள்ளிக்கிழமை கருடனை தரிசித்தால் ஐஸ்வர்யம் உண்டாகும், லக்ஷ்மி கடாட்சம்உண்டாகும், செல்வச் செழிப்பு ஏற்படும். சனிக்கிழமை கருட தரிசனம் கிடைத்தால், சனி பகவானின் அருளும், சகல சௌபாக்கியமும், நற்கதியும் கிடைக்கும், கர்மவினை தீரும் என்று சொல்லப்படுகிறது.