நம் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்னைகளை சரிசெய்யவும், தொழிலில் முன்னேற்றம் மற்றும் லாபம் கிடைக்கவும் சில சிலைகளை வீட்டில் வைக்க வேண்டியது அவசியமாகும். அந்த சிலைகள் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. காமதேனு சிலை: காமதேனு சிலையை வீட்டில் வைப்பது நல்லது. அதுவும் கன்றோடு இருக்கும் காமதேனுவை பூஜையறையில் வைப்பது லக்ஷ்மி கடாட்சத்தை அதிகரிக்கும், தெய்வ சக்தியை கூட்டும். காமதேனுவில் மும்மூர்த்திகளும், மூன்று தேவியரும், ரிஷிகளும், முனிவர்களும், தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். இந்த சிலை நம் வீட்டில் இருந்தால், நாம் கேட்கக்கூடிய அனைத்து வரங்களும் கிடைக்கும், செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
2. குதிரை சிலை: குதிரை சூரிய பகவானின் வாகனமாகவும் சுக்கிர பகவானின் வாகனமாகவும் கருதப்படுகிறது. வீட்டில் குதிரை சிலையோ அல்லது ஏழு குதிரை வாஸ்து படத்தை வைப்பதின் மூலமாக முன்னேற்றமும், வளர்ச்சியும், உயர்வும் ஏற்படும். தொழில் செய்யும் இடத்தில் குதிரை படம் வைப்பதால், தொழிலில் வேகமும், லாபமும் ஏற்படும்.
3. ஆமை சிலை: மகாவிஷ்ணுவின் முக்கியமான அவதாரமாக ஆமை கருதப்படுகிறது. பாற்கடலை கடையும்போது மத்தாக மகாவிஷ்ணுவின் அவதாரமாக ஆமை விளங்கியது. அப்போது பாற்கடலில் இருந்து மகாலக்ஷ்மி, காமதேனு, வலம்புரி சங்கு, தன்வந்திரி போன்ற புனிதமான விஷயங்கள் தோன்றியன. அதற்கு முக்கியக் காரணமாக இருந்த ஆமையின் சிலையை நம் வீட்டின் பூஜையறையில் வைப்பது வாஸ்து பிரச்னையை சரிசெய்யும், தெய்வீக சக்தியை கொடுக்கும், செல்வ வளம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. இதை தொழில் செய்யும் இடத்தில் வடக்கு திசை மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதின் மூலமாக செல்வ செழிப்பை அடையலாம்.
4. ஆந்தை சிலை: ஆந்தை மகாலக்ஷ்மியின் வாகனமாக கருதப்படுகிறது. எனவே, வீட்டில் ஆந்தை சிலை வைப்பதால், செல்வம், செல்வாக்கு, மிகபெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
5. யானை சிலை: இரட்டை யானை மகாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது. இரட்டை யானை சிலையை பூஜையறையில் வைப்பதன் மூலமாகவும் அல்லது வீட்டின் ஹாலில் வைப்பதின் மூலமாகவும் நல்ல பண வரவு, முன்னேற்றம், லாபம் அதிகரிக்கும். வீட்டில் லக்ஷ்மி கடாட்சத்தை அதிகரிக்கும். இந்த 5 சிலைகளில் எந்த சிலை உங்கள் வீட்டில் உள்ளது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.