
கடலூர் மாவாட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் உள்ள கொள்ளிடம் வடகறையில் அமைந்துள்ள கிராமம் தான் வல்லம்படுகையாகும். இங்கே தான் கோவில் கொண்டுள்ளார் பரதேசியப்பர்.
பிரம்மனின் ஆணவத்தை அடக்க அவரின் தலையை கொய்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதனால் சிவபெருமான் பரதேசியாக ஊர் ஊராக திரிந்து கபால பிச்சை எடுத்து வந்தார். ஒருநாள் அவர் வல்லம்படுகை என்ற ஊருக்கு வந்தப்போது இரவானதால் அந்த ஊர் காவலனான பாவாடை ராயன் அவரை பரதேசி என்று எண்ணி சிவபெருமானை சிறையில் அடைத்தார்.
மறுநாள் வந்துப் பார்த்த பாவாடை ராயனுக்கு சிவபெருமான் தன் ரூபத்தில் காட்சியளித்தார். அதைக் கண்ட பாவாடை ராயன் கதறி அழுது தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். சிவனையே சிறை வைத்ததை எண்ணி பாவாடை ராயன் வருந்தினார். மேலும் தான் செய்த பாவத்தை போக்க தங்களுடனே இருந்து பணிவிடை செய்ய அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். அதனால் வல்லம்படுகையில் சிவப்பெருமான் பரதேசியப்பராய் எழுந்தருளினார்.
அவருக்கு காவலாக பாவாடை ராயன் இருக்கிறார். இன்றும் கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் வல்லம்படுகையில் பரதேசியப்பர் என்ற திருநாமத்தில் காட்சியளிக்கிறார். அவரின் காவலராக பாவாடை ராயன் எழுந்தருளியுள்ளார்.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழியாக ரயில்பாதை அமைக்க ஆங்கிலேயர்கள் கோவில் கருவறை இடிக்க முயன்று பணியை ஆரம்பித்தனர். ஆனால், அதே இரவு ஏற்கனவே பதிக்கப்பட்ட தண்டவாளங்கள் வேறு திசையில் தூக்கி எறியப்பட்டிருந்தன. இது மீண்டும் மீண்டும் நடந்தும் ஆங்கிலேயர்கள் பணியை நிறுத்தவில்லை. இதனால் பணியில் இருந்த முக்கியமான ஆங்கில பொறியாளர் ஒருவருக்கு கண் பார்வை போனது. இதனால் பணியை மாற்றி தண்டவாளத்தை வேறுப்பக்கமாக அமைத்தனர். அவர்கள் செய்த தவறுக்கு பரிகாரமாக கோவிலில் குதிரை சிலையை நிறுவி பரிகாரம் செய்தனர்.
தமிழ்நாட்டின் ஆண் காவல் தெய்வங்களுள் பாவாடை ராயனும் ஒருவராவார். இவர் கிராமப்புரங்களில் மிகவும் பிரபலமாவார். பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்கிறார். அங்காள பரமேஸ்வரியின் மகன் மற்றும் காவலன் என்று பாவாடை ராயனை சொல்கிறார்கள். மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் காவல் தெய்வமாக பாவாடை ராயன் இருக்கிறார். இங்கே பாவாடை ராயனுக்கு தனி சன்னதியிருக்கிறது. தன்னுடைய இருமனைவியுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
இக்கோவில் பிரகாரத்தில் விநாயகர், முத்தாலம்மன், பேச்சியம்மன், முனீஸ்வரன் இருக்க கோவிலின் பின்புறம் முத்துனாச்சியார், அறியநாச்சியார் என இருமனைவிகளுடன் பாவாடைராயன் எழுந்தருளியுள்ளார். நீங்களும் இக்கோவிலுக்கு சென்று பரதேசியப்பரை தரிசித்து வாழ்வில் மேன்மையடையுங்கள்.