பழநி தண்டாயுதபாணி முருகன் சிலை உருவானது எப்படித் தெரியுமா?

பழநி தண்டாயுதபாணி முருகன் சிலை உருவானது எப்படித் தெரியுமா?
Published on

ழநி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி சிலை நவபாஷாணத்தால் சித்தர் போகரால் உருவாக்கப்பட்டது. நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான நச்சுப் பொருட்கள் சேர்ந்த கலவையாகும். சாதி லிங்கம், காந்தம், கந்தகம், பூரம், காரம், வெள்ளை பாசாணம், கௌரி பாசாணம், தொட்டி பாசாணம், மனோசிலை ஆகிய ஒன்பது பொருட்களை வைத்து பழநி தண்டாயுதபாணி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ‘கன்னிவாடி’ என்ற ஊருக்கு மேற்கே அமைந்துள்ள அரிகேச பர்வத மலையில் இருக்கும் ஒரு குகையில் இந்தச் சிலையை சித்தர் போகர் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

முருகப்பெருமானின் இந்தத் திருச்சிலை மீன்களைப் போன்று செதில்களைக் கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. தினமும் இரவு நேரத்தில் இந்தச் சிலையின் மீது சந்தனம் பூசப்பட்டு காலையில் விஸ்வரூப தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அந்த சந்தனத்தை பிரசாதமாக வழங்குகிறார்கள். இந்த சந்தனம் பிணிகளைத் தீர்க்கும் அருமருந்தாக கருதப்படுகிறது.

போகர் சித்தர் இந்தச் சிலையை செய்ததற்குக் காரணமாக ஒரு சுவையான தகவல் கூறப்படுகிறது. அகஸ்திய முனிவர் தன்னை நாடி வருபவர்களுக்கு பஸ்பம், வில்லை போன்ற மருந்துகள் கொடுத்து நோயை குணப்படுத்த, சித்தர் போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த மருந்தைக் கொடுத்து வந்தார். அகத்தியர் கொடுத்த மருந்தால் மக்கள் விரைவில் குணமடைந்து வந்தனர். ஆனால், போகரின் மருந்துகள் வீரியம் அதிகம் கொண்டவை என்பதால், அதைச் சாப்பிட்ட மக்கள் பலர் உயிரிழந்தனர். இதனால் சித்தர் போகர் நவபாஷாணத்தால் ஒரு சிலையைச் செய்து அதன் மீது சந்தனத்தைப் பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு தன்னை நாடி வருபவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் நோயை குணப்படுத்தி வந்தார் என்பது ஒரு செவிவழிச் செய்தியாகக் கூறப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com