திருநீறு எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

Thiruneeru
Thiruneeru
Published on

கோயில்களில் திருநீறு இல்லாமல் எந்த வழிபாடும் முழுமை பெறாது. ஆன்மிகத்தில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ள திருநீறு எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

ஆன்மிகத் தலங்களுக்குச் சென்றால் சாமி தரிசனம் செய்ததும் திருநீறும், குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படும். வாசனை கமழும் திருநீற்றை விபூதி என்றும் அழைப்பார்கள். சாம்பல் நிறத்தில் இருக்கும் திருநீற்றை நெற்றியில் பூசிக் கொண்டால் தன்னை அறியாமலேயே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். தெய்வீக மணம் கொண்ட இந்தத் திருநீற்றை எப்படித் தயாரிக்கிறார்கள் என்று எப்போதேனும் சிந்தித்தது உண்டா! மகிமை பொருந்திய திருநீற்றின் பிறப்பிடம் எதுவென்று நீங்கள் அறிந்தால் நிச்சயமாக ஆச்சரியம் அடைவீர்கள்.

திருநீறு தயாரிக்கத் தேவையான அடிப்படை மூலப்பொருள் பசுஞ்சாணம்தான். பசுக்களை கோமாதா என்று பக்தியுடன் வணங்கி, அவ்வப்போது கோபூஜைகளும் செய்கிறோம். தெய்வீகம் பொருந்திய பசுக்களின் சாணம்தான் திறுநீறு தயாரிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பொதுவாக, சாணத்தை வட்டமாகத் தட்டி சுவற்றில் காய வைத்து வரட்டியை உருவாக்குவார்கள். பல கிராமங்களில் இன்றும் வரட்டி தயாரிக்கும் நடைமுறை உள்ளது. இதனை விறகுக்கு மாற்றாகவும் பயன்படுத்தி வந்தனர். அதிலும் சில கிராமங்களில் வரட்டியைக் கொண்டுதான் தைப்பொங்கல் வைக்கப்படுகிறது. தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து விட்ட ஒரு பொருள் வரட்டி என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அதன் பயன்பாடு இருந்து வருகிறது. ஆன்மிகமும் பாரம்பரியமும் நிறைந்த திருநீற்றைத் தயாரிக்கும் முறையில் கூட தெய்வ சக்தி இருக்கிறது. ஆம், திருநீற்றின் மகத்துவத்தை உணர்ந்தவர்களுக்குத்தான் இது புரியும்.

திருநீறு தயாரிக்க பசுஞ்சாணத்தை வட்டமாகத் தட்டி நடுவில் சிறு துளைகளை உண்டாக்கி குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு வெயிலில் காய விட்டால் வரட்டியாக மாறி விடும். இதனுடன் நெய் மற்றும் மூலிகைப் பொருட்களான சூடமும், ஏலக்காயும் சேர்த்து நெருப்பில் எரிக்க வேண்டும். இதன் முடிவில் சாம்பல் உருவாகும். இந்தச் சாம்பலை ஆற வைத்து பத்திரமாக எடுத்து வைப்பார்கள். இதுதான் கோயில்களில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான வாழ்வு தரும் குங்குமம்!
Thiruneeru

திருநீறு தயாரித்து முடித்தவுடன் எந்தவித வாசனையும் வராது. தயாரிக்கப்பட்ட திருநீற்றை கோயிலில் சாமிக்கு பூஜித்தவுடன் அதில் தெய்வீக மணம் வீசும். கோயிலில் திருநீற்றைப் பூசும்போது சூரியன் உதிக்கும் கிழக்கு திசைப் பார்த்து நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு முன்பாக திருநீறு பூசக் கூடாது. சாமி தரிசனம் முடித்துவிட்டு கிழக்கு நோக்கிதான் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு திருநீறை பூசிக்கொள்வதன் மூலம் முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது. நெற்றியில் திருநீறு பூசுவதன் மற்றொரு அர்த்தம் யாதெனில், பூமியில் அனைவருமே ஒருநாள் எதுவுமின்றி சாம்பலாகத்தான் மாறப் போகிறோம் என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்துவதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com