ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீர் துளியில் இருந்து தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. சிவபெருமான் நீண்ட காலம் ஆழ்ந்த தியானத்தில் வீற்றிருந்தார். நீண்ட காலத்துக்குப் பிறகு அவர் கண்களைத் திறந்தபோது அவரது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்தன. பூமி பிரதேசத்தின் இந்தியா, நேபாளம், இந்தோனேசியா போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் சிவபெருமானின் அந்தக் கண்ணீர் துளிகள் விழுந்தன.
இந்தக் கண்ணீர் துளிகள்தான் விருட்சமாக வளரத் தொடங்கியது. இவற்றைத்தான் நாம் ருத்ராட்ச மரம் என்கிறோம். ருத்ராட்ச மரத்தில் காய்த்த காய்கள் முதிர்ந்து புனிதமான ருத்ராட்சமாக மாறியது.
இந்த ருத்ராட்சம் ஈசனின் கருணையாகக் கருதப்படுகின்றது. சிவபெருமானின் கண்ணீர் துளிகள் ருத்ராட்சமானதால், இது ஒரு தெய்வீகமான புனிதப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ருத்ராட்சமும் ஆன்மிக சக்தி, ஞானம், தூய்மை, அமைதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ருத்ராட்சம் மூலமாக சிவபெருமானே நம்முடன் இருப்பதாக பக்தர்கள் கருதுகிறார்கள். தெய்வ சக்திக்கும் நமக்குமான தொடர்பை ஏற்படுத்தும் புனிதப் பொருளாக ருத்ராட்சம் திகழ்கிறது.
ருத்ராட்சத்தை ஆண், பெண் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் அணியலாம். பெண்கள் ருத்ராட்சம் அணிவதற்கு சில வரைமுறைகள் உள்ளன. ருத்ராட்சம் அணிபவர்கள் அதை முறையாக வாரத்திற்கு ஒரு முறை பூஜை செய்து அணிந்துக்கொள்வது சிறப்பாகும். குறிப்பாக, பிரதோஷம் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாளான திங்கட்கிழமைகளில் பூஜை செய்து அணிவது நல்லது.
ருத்ராட்சத்தை பூஜை செய்யும் முறை: சுத்தமான தாம்பூலத் தட்டில் ஒரு வெற்றிலையை வைத்து அதன் மீது ருத்ராட்சத்தை வைத்து சந்தனம், பன்னீர், விபூதி, வில்வம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். அபிஷேகம் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்பு ருத்ராட்சத்தை சுத்தமான பாலில் ஊற வைத்து அதன் பின்பு பூஜை செய்து அணிந்துக்கொண்டால், நேர்மறை சக்திகள் நமக்குக் கிடைக்கும்.
ருத்ராட்சம், பல இடங்களுக்குப் பிராயணம் செய்து, பல இடங்களில் சாப்பிட்டு தூங்குபவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இது துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கக் கூடியதாகும். சிலர் தமக்கு வேண்டாதவர்களை அழிக்க தீய சக்திகளை பயன்படுத்துவதுண்டு. அதுபோன்ற சமயங்களில் ருத்ராட்சம் பாதுகாப்புக் கவசமாக செயல்பட்டு நம்மை காப்பாற்றும்.