
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மலர் தும்பை பூவாகும். பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு தும்பைப்பூ மாலையை அணிவித்து வணங்கினால், சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த தும்பைப்பூ எப்படி சிவபெருமானுக்கு உகந்த பூவாக ஆனது என்பதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
வெள்ளை நிறத்தில் மிகவும் சிறியதாக இருக்கும் தும்பைப்பூ சிவபெருமானுக்கு மிகவும் இஷ்டமான மலராகும். இது சிவபூஜைக்கு உகந்த பூவாகும். இந்த பூவுக்கு நிறைய மருத்துவகுணங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் தும்பைப் பூவிற்கு தன் திருமுடியில் இடம் கொடுத்ததற்கான புராணக்கதை உண்டு.
முன்னோரு காலத்தில் தும்பை என்ற பெண் வாழ்ந்து வந்தாள். தும்பை தீவிரமான சிவபக்தையாவாள். இவள் ஈசனை நோக்கி கடுமையாக தவம் செய்து வந்தாள். அவளின் பக்தியால் மனம் குளிர்ந்த ஈசன் அவள் முன் தோன்றி, ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?' என்று கேட்டார்.
எல்லோருமே ஈசனின் திருவடி நிழலிலேதான் இருக்க ஆசைப்படுவார்கள். ஆனால், ஈசனை நேரில் தரிசித்த பதற்றத்தில், ‘ஐயனே! எனது திருமுடி மீது உன் திருவடி இருக்க வேண்டும்’ என்று கேட்பதற்கு பதில் ‘உனது திருமுடியின் மீது எனது திருவடி இருக்க வேண்டும்’ என்று வரம் கேட்டுவிட்டாள் தும்பை.
ஈசனும் சிரித்துக்கொண்டே, ‘அவ்வாறே ஆகட்டும்’ என்று வரமளிக்க அப்போதுதான் அவள் கேட்ட வரம் தவறாகிவிட்டதை உணர்கிறாள். உடனே தும்பை ஈசனிடம், ‘கடவுளே! தங்களை தரிசித்த பதற்றத்தில் தவறாக வரம் கேட்டுவிட்டேன். என்னை மன்னித்து அருள் புரியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டாள்.
கருணைக் கடலான ஈசன், ‘தும்பையே! உன்னுடைய பக்தியின் பெருமையை விவரிக்க முடியாது. நீ அடுத்த ஜென்மத்தில் பூவாக பிறந்து என் திருமுடியை அலங்கரிப்பாய்’ என்று கூறினார். தும்பைப்பூவை உற்று நோக்கினால், ஐந்து விரல்கள் கொண்ட பாதத்தை போல இருக்கும். ‘எப்போதும் உன் பாதம் என் திருமுடியில் இருப்பது போன்று இருக்கும் தும்பை மலரை நான் விரும்பி சூடுவேன்’ என்று சிவபெருமான் வரமளித்தார்.