கலியுகம் முடியும்போது உயிர்த்தெழும் நந்தி எந்தக் கோயிலில் உள்ளது தெரியுமா?

Do you know in which temple Nandi will be resurrected at the end of Kaliyuga?
Do you know in which temple Nandi will be resurrected at the end of Kaliyuga?https://twitter.com

மது வாழ்வில் தினம் தினம் எத்தனையோ கோயில்களை பார்த்தாலும், அவை பற்றி கேட்டாலும் எதுவுமே திகட்டுவதில்லை. எல்லா கோயில்களுமே தன்னுள் ஏதோ ஒரு அதிசயத்தையும், வியப்பையும் தாங்கிக்கொண்டுதான் நிற்கின்றன. அப்படி ஒரு அதிசயக் கோயில்தான் ஆந்திர பிரதேசம், நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலான ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் திருக்கோயிலாகும்.

இக்கோயிலை 15ம் நூற்றாண்டில் ராஜா ஹரிஹரபுக்கா கட்டியுள்ளார். ஒருசமயம் அகத்திய முனிவர் இங்கு பெருமாளுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், இங்கே ஒவ்வொரு முறையும் பெருமாள் சிலையை நிறுவ முயலும்போதும், அந்த சிலையின் கால் விரல் உடைந்து போய்விடுகிறது. இதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள அகத்தியர் சிவனை நோக்கி தவமிருக்கிறார். சிவபெருமான் அகத்தியர் முன்பு தோன்றி, இவ்விடம் கயிலாயத்திற்கு இணையானது. இங்கே சிவன் கோயில் கட்டுவதே சிறந்ததாகும் என்று கூறியிருக்கிறார். இதனால் அகத்தியர், சிவபெருமானிடம் பார்வதி தேவியின் ஒற்றைக்கல்லால் ஆன சிலையைக் கேட்டுள்ளார். சிவபெருமானும் அதை வழங்கினார் என்பது புராணம்.

இன்னொன்று சிவனின் பக்தரான சித்தேப்பா என்பவர் சிவனை நோக்கி ஒரு குகையில் தவமிருந்துள்ளார். ஒரு நாள் சிவன் புலி ரூபத்தில் சித்தேப்பாவின் முன் தோன்றியுள்ளார். அங்கே வந்திருப்பது சிவபெருமான் என்று தெரிந்ததும், ‘நான் சிவனை கண்டு விட்டேன்’ என்று மகிழ்ச்சியில் ஆடியிருக்கிறார். இதனால் அந்தக் குகையே, ‘சித்தேப்பா குகை’ என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இக்கோயிலில் மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அச்சமயம் இந்தியாவிலுள்ள சிவபக்தர்கள் அனைவரும் இக்கோயிலுக்கு வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் சிவன், பார்வதி மற்றும் நந்தியே முக்கிய கடவுள்களாக வழிபடப்படுகிறார்கள்.

இங்குள்ள திருக்குளத்தில் உள்ள நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் தூய்மையாகவும், இனிப்பாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீர்த்தக் குளத்தில் குளிப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அகத்திய முனிவரும் இத்திருக்குளத்தில் நீராடிவிட்டே சிவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இக்குளத்தில் குளித்துவிட்டே சிவனை பக்தர்களும் வழிபடுகிறார்கள். இக்குளம் எக்காலத்திலும் வற்றவே வற்றாது என்று கூறப்படுகிறது.

அகத்தியர் சிவபெருமானை வழிபட்ட குகையை, ‘அகத்தியர் குகை’ என்று அழைக்கிறார்கள். இக்குகைக்கு செல்ல வேண்டுமெனில் 120 படிக்கட்டுகள் ஏறிச்செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, இங்கு வெங்கடேஸ்வரா குகை உள்ளது. இக்குகையில் அகத்தியர் கொண்டு வந்த உடைந்து சேதமான பெருமாளின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அகத்தியர் குகையை ஒப்பிடுகையில் இக்குகைக்கு ஏறி செல்வது சற்று சுலபமே என்று கூறுகிறார்கள். இந்தக் குகையில் உள்ள பெருமாளின் சிலை திருமலை திருப்பதி பெருமாள் சிலைக்கு முன்பிருந்தே இங்கிருப்பதாகக் கூறப்படுகிறது.

வீரபிரம்மம் குகையில்தான் முனிவர் வீரபிரம்மேந்திர சுவாமிகள் காலஞானத்தை எழுதினார். இக்குகை உயரத்தில் குறைவாக இருப்பதால் குனிந்தே உள்ளே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிருக்கும் நந்தி வளர்ந்துகொண்டே போவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இங்குள்ள நந்தி இப்போது இருக்கும் அளவை விட சிறியதாகவே இருந்திருக்கிறது. விஞ்ஞானிகள் வந்து ஆய்வு செய்துவிட்டு கூறியது என்னவென்றால், ‘நந்தி சிலையை செதுக்கியிருக்கும் கல்லானது வளரும் தன்மையை கொண்டது’ என்று கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இதயத்துக்கு இதமளிக்கும் இயற்கை உணவுகள் ஏழு!
Do you know in which temple Nandi will be resurrected at the end of Kaliyuga?

இக்கோயில் நந்தி வளர்ந்துகொண்டேபோவதால், கோயில் நிர்வாகம் ஒரு தூணையே எடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. வீரபிரம்மேந்திர சுவாமிகளின் கூற்றின்படி, இந்த நந்தி கலியுக முடிவில் உயிர்பெற்று எழும் என்று கூறியிருக்கிறார்.

அகத்திய முனிவர் தவம் செய்து கொண்டிருந்தபொழுது, காகம் ஒன்று அவரை தொந்தரவு செய்ததால் இங்கே காகம் வரக்கூடாது என்று சபித்து விட்டாராம். அதனால் இக்கோயிலைச் சுற்றி காகத்தை காண முடியாது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். காகம் சனி பகவானின் வாகனம், ஆதலால் இக்கோயிலில் சனி பகவானாலும் நுழைய முடியாது என்பது ஐதீகம்.

எனவே, இக்கோயிலில் வளரும் நந்தி, வற்றாத குளம், குகைகள் என கண்டு பிரமிக்க வேண்டிய பல அதிசயங்கள் உள்ளன. ஆதலால், ஒருமுறை இக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்துவிட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com