பிள்ளையார் வழிபாடு என்பது மிகவும் எளிமையானதாகும். பிள்ளையாருக்கு என்று பெரிதாக பூஜைகள் செய்யத் தேவையில்லை. கையில் கிடைத்த மஞ்சள், குங்குமம், மண், சாணம் என்று எதை வேண்டுமானாலும் பிடித்து வைத்து பிள்ளையாராக வழிபடலாம். அதை அவரும் மனதார ஏற்றுக்கொண்டு நம் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார். பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடும்போது எந்தப் பொருளைப் பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சௌபாக்கியமும் கிடைக்கும், காரிய ஸித்தியாகும். குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க, செவ்வாய் தோஷம் அகலும், குழந்தைகள் படிப்பில் வல்லவராக சிறந்து விளங்குவர்.
புற்று மண்ணில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், நோய்கள் தீரும், விவசாயம் செழிக்கும். வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வணங்கினால், கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். தன வரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல வளம் உண்டாகும். உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், எதிரிகள் தொல்லை நீங்கும். நம் வாழ்வில் இருந்து எதிரிகளை விரட்டியடிப்பார் பிள்ளையார்.
வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கி வந்தால் பில்லி, சூன்யம், ஏவல் நீங்கும். செல்வச் செழிப்பு உயரும். விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும். சந்தனத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி, வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும். வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால், வம்ச விருத்தி உண்டாகும்.
வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட்டால், காதல் வெற்றி பெறும். கணவன், மனைவி ஒற்றுமை கூடும். பசுஞ்சாண விநாயகர் நோய்களை நீக்குவார். கல் விநாயகர் வெற்றியைத் தருவார், மண் விநாயகர் உயர் பதவிகளைக் கொடுப்பார். எனவே, இந்தப் பொருட்களில் பிள்ளையார் பிடித்து வைத்து பக்தியோடு வணங்கி வர, ககல நலமும் பெற்று சிறப்பாக வாழலாம். முயற்சித்துப் பாருங்களேன்.