நாம் தூங்கும்போது வரும் கனவுகள் சில சமயங்களில் நமக்கு குறிப்புகளை விட்டுச் செல்லும். நம்முடைய எதிர்காலத்து பலன்களைக் கணித்து சொல்வதாகவும் கனவுகள் இருப்பதாக பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது. எனவே, கனவில் வரும் செய்திகளை குறைத்து மதிப்பிடாமல், அதன் அர்த்தத்தை புரிந்துக்கொள்வது வாழ்க்கையில் மேன்மையடைய உதவும். இந்தப் பதிவில் கனவில் விலங்குகள் வந்தால் உண்டாகும் பலன்கள் பற்றி பார்ப்போம்.
கனவில் ஆடு வந்தால், நல்ல தனவிருத்தி கிடைக்கப்போகிறது, தெய்வத்தின் அருள் பூரணமாக நமக்கு இருக்கிறது என்று அர்த்தம்.
ஆமை வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், கனவில் ஆமை வருவது நன்மையேயாகும். ஆமை கனவில் வந்தால், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
எருது மிதிப்பது போல அல்லது மாடு விவசாய நிலத்தில் நடப்பது போல கனவு கண்டால், குடும்பத்தில் இத்தனை நாட்களாக இருந்த பிரச்னை குறையும். பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போல கனவு வந்தால், புதிய சொத்துக்கள் வாங்குவோம் என்று அர்த்தமாகும். பசு குட்டிப்போடுவது போல கனவு வந்தால், குடும்பத்தில் சுபமான நிகழ்ச்சி நடக்கப்போவதாக அர்த்தம். மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கப்போவதாகப் பொருள்.
குதிரை கனவில் வந்தாலோ அல்லது நாம் குதிரை மீது சவாரி செய்வது போல கனவு வந்தாலோ, வாழ்க்கையில் முன்னேற்றம் வரப்போவதாக அர்த்தம்.
நாய் கனவில் வந்தால், உத்தியோகத்தில் உயர்வு மற்றும் தொழில் விருத்தியடையும். கீரிப்பிள்ளை கனவில் வந்தால், எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கீரிப்பிள்ளை பாம்பை கொல்வது போல கனவு வந்தால், உறவினர்களிடம் இருந்து வந்த பகை விலகும்.
மயில், வானம்பாடி போன்றவற்றை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் ஏற்படும் என்று பொருள்.
யானை கனவில் வந்தால், பெரும் செல்வம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கப்போவதாக அர்த்தம். யானை நமக்கு மாலையிடுவது போன்ற கனவு கண்டால், திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கப்போவதாகப் பொருள். யானை மீது அமர்ந்து வருவது போல கனவு கண்டால், எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
ஓநாய் ஊளையிடுவது போல கனவு வந்தால், துக்க செய்திகள் வரப்போவதாக அர்த்தம். குரங்குகள் கனவில் வந்தால், விரோதிகளால் துன்பம் ஏற்படும். ஒட்டகம் கனவில் வந்தால், நாம் மேற்கொள்ளும் பயணத்தில் பல்வேறு பிரச்னைகள் வரும் என்று பொருள். தேள் கனவில் வந்தால், ஒரு பெரிய விபத்தில் மாட்டும் சூழ்நிலை ஏற்படும் என்று பொருள்.
எனவே, தேள் கனவில் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுண்டெலி கனவில் வந்தால், வாழ்க்கையில் வரும் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும். வீட்டில் சமையலறையில் பூனை இருப்பது போலவோ அல்லது பூனை குட்டிப் போட்டிருப்பது போலவோ கனவு வந்தால், உடல்நல பாதிப்புகள் ஏற்படும். எனவே, இதுபோன்ற கனவுகள் வரும்போது சற்று எச்சரிக்கையாக இருந்துக் கொள்வது நல்லது.