
இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோவில்களும், அக்கோவில்களில் நடத்தப்படும் வித்தியாசமான சடங்குகளும் நம்மை ஆச்சர்யப்படுத்த தவறியதில்லை. அத்தகைய கோவில்களில் ஒன்றுதான் இந்தியாவில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜயினியில் அமைந்துள்ள காலபைரவர் கோவில் ஆகும். இக்கோவிலின் தனி சிறப்பே இங்குள்ள காலபைரவருக்கு பக்தர்கள் மதுபானம் வழங்குவதுதான். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
இக்கோவிலில் உள்ள காலபைரவர் பாதுகாவலராக கருதப்படுகிறார். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இங்குள்ள காலபைரவரின் உருவம் முகம் போன்ற வடிவத்தில் குங்குமம் பூசப்பட்டு காணப்படுகிறது.
இக்கோவிலில் வாசலில் அர்ச்சனை செய்யப் படுவதற்கான பொருட்களில் தேங்காய், பூ, ஊதுபத்தி மற்றும் மதுபானம் சேர்த்து விற்கப்படுகிறது. 2015ல் மாநில அரசே மதுபானக் கடைகளை கோவிலுக்கு வெளியே அமைத்து மதுபானத்தை பக்தர்களுக்கு விற்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. போலியான மதுபானங்கள் விற்கப்படுவதை தடுப்பதற்காகவே இத்தகைய முயற்சியை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இங்கே வெளிநாட்டு மதுபானம், உள்நாட்டு மதுபானம் என்று பலவகையான மதுபானங்கள் விற்கப்படுகிறது.
தினமும் இக்கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வந்து கால பைரவருக்கு மதுபானத்தை அருந்த தருகிறார்கள். பக்தர்கள் வாங்கி வரும் மதுபானத்தை அங்குள்ள அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி காலபைரவரின் வாய்ப்பகுதியில் வைக்க சிறிது சிறிதாக மதுபானம் குறைவதைக் கண்கூடாக காணமுடிகிறது. இந்த அதிசயக் காட்சியை காண்பதற்காகவே தினமும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். மதுபானத்தில் சிறிது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள அர்ச்சகரும், பக்தக்களும் காலபைரவர் சிலையில் எந்ந ஓட்டையும் இல்லை என்றும் காலபைரவரே மதுபானத்தை அருந்துவதாக நம்புகிறார்கள். எனினும், இக்கோவிலில் உள்ள அர்ச்சகர் பார்வையாளர்களை காலபைரவரிடம் நெருங்க விடுவதில்லை. அவர்களை பிரசாதம் வழங்கவும் விடுவதில்லை.
அர்ச்சகர் கொடுத்தால் மட்டுமே காலபைரவர் மது அருந்துவார் என்றும் மற்றவர்கள் முயற்சித்தால் தோற்றுப் போவதாகவும் சொல்கிறார். தினமும் நூறு லிட்டருக்கு மேல் மதுபானம் கால பைரவருக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு மதுபானமும் எங்கே செல்கிறது என்பது மர்மமாகவே உள்ளது. இத்தகைய வித்தியாசமான அதிசயக் கோவிலைப் பற்றி நீங்கள் என்ன நிறைக்கிறீர்கள்? இதைப் பற்றிய உங்களுடைய கருத்தை தெரிவியுங்கள்.