நாம் தூங்கும்போது தலையணைக்கு அடியிலோ அல்லது அருகிலோ சில பொருட்களை வைத்துத் தூங்குவதன் மூலமாக நம்மைச் சுற்றியிருக்கும் சில எதிர்மறையான விஷயங்கள் தடுக்கப்படும். உதாரணத்துக்கு, திருமணம் கைக்கூடும், நிதி சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. ஏலக்காய்: ஏலக்காய் நல்ல நறுமணம் தரக்கூடிய பொருளாகும். இதை நாம் தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால், நம் வாழ்வில் மிகப்பெரிய செல்வத்தையும், செல்வாக்கையும் கவர்ந்திழுக்கக்கூடிய சக்தியை அந்த ஏலக்காயில் இருந்து வருகின்ற வாசனை ஆழ்மன சக்திக்கு அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.
2. விரலி மஞ்சள்: மஞ்சள் திருமாங்கல்யத்திற்கு இணையாக புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது. அத்தகைய மஞ்சளை தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்கினால், காதல் கைகூடும் என்று சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணத் தடை, திருமணம் தள்ளிபோகும் பிரச்னைகள் சரியாகி நல்ல வாழ்க்கை துணை அமையும் என்று சொல்லப்படுகிறது.
3. கிராம்பு: கிராம்பு நல்ல நறுமணத்தை தரக்கூடிய பொருளாகும் இது. ஒருசிலருக்கு இரவில் தூங்கும்போது, கெட்ட கனவுகளும், கஷ்டப்படுவது போன்ற கனவுகளும் வந்து தூக்கத்தைக் கெடுத்து தூங்க முடியாதவாறு செய்யும். இவர்கள் கிராம்பை தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்கும்போது இதுபோன்ற எதிர்மறை சக்திகளை தடுக்கக்கூடிய சக்தி கிராம்பிற்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.
4. ஜாதிக்காய்: மூலிகைகளிலேயே மிகவும் உயர்ந்த மூலிகை ஜாதிக்காய் ஆகும். இந்த ஜாதிக்காய் மகாலக்ஷ்மியின் அம்சத்தை கொண்டதாகும். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கிறது. இதை முகத்தில் பயன்படுத்தினால், முகம் பளபளப்பாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஜாதிக்காயை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கும்போது, பொருளாதார சம்பந்தமாக வரும் அனைத்து தடைகளும் நீங்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். தொழிலில் லாபம் சேரும் என்று சொல்லப்படுகிறது.
5. எலுமிச்சை பழம்: எலுமிச்சை பழம் தெய்வீக சக்தியையும், நேர்மறை ஆற்றலையும் அதிகம் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய பொருளாகும். இதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கும்போது, உங்களுக்குள் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும். அதுவும் நீங்கள் பயன்படுத்தும் எலுமிச்சை பூஜை அறையில் தெய்வத்தை பூஜித்த பழமாக இருந்தால், அதிக ஆற்றல் உடையதாகக் கருதப்படுகிறது.