நம் அனைவர் உள்ளங்கைகளிலும் எப்படி ரேகை இருக்கிறதோ, அதைப்போல உச்சந்தலையில் இருக்கும் சுழிக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது. சாமுத்ரிகா லட்சணத்தில் இருக்கும் குறிப்புகளும், ஜோதிடத்தில் இருக்கும் குறிப்புகளும் இந்த உச்சந்தலை சுழியைப் பற்றி தெளிவாகக் கூறுகின்றன. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
உங்களது தலையில் இருக்கும் சுழி வலது பக்கமாகவும், நீங்கள் சந்திக்கும் நபருக்கு சுழி இடது பக்கமாகவும் இருந்தால், உங்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் ஏற்படாமல் நல்ல நட்புடன் பழகும், வலிமையான உறவு உண்டாகும். இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும். கணவன், மனைவியாக இருந்தால் நல்ல புரிதல் ஏற்படும். நட்பாக இருந்தால், நட்பு பலப்படும். இதுவே சுழி எதிரெதிராக இருந்தால் கருத்து வேறுபாடு ஏற்படும்.
தலையின் வலப்புறம் ஒற்றை சுழியாக இருந்தால், மிகவும் அன்பானவராக இருப்பார். அவரைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் இருக்கும். சொந்த பந்தங்கள் ஏராளமானவர்கள் இருப்பார்கள். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய திறன் இருக்கும்.
தலையின் வலப்பக்கம் இரட்டை சுழி இருந்தால், வசதி படைத்தவராகவும், பேரும் புகழும் நிலைத்தவராகவும் இருப்பார்கள்.
தலையில் ஒற்றை சுழி இடது பக்கமாக இருந்து, அது வலப்புறமாக சுழன்று இருந்தால், அவர்களது வாழ்க்கை போராட்டக்களமாக இருக்கும். சிறு வயது முதலே பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். வாழ்க்கையில் நடுத்தர வயதை அடையும்போது இது சரியாகும் என்று ஜோதிட குறிப்புகள் கூறுகின்றன. இவர்களது வாழ்க்கையில் கஷ்டம், மகிழ்ச்சி இரண்டுமே சரிசமமாக அமையும்.
தலையின் இடது பக்கம் இரட்டை சுழி இருந்து அது இரண்டுமே இடது புறமாக சுழன்று அமைந்துவிட்டால், மிகவும் துயரமான வாழ்க்கை அமையும். உங்கள் வாழ்க்கையில் போராடாமல் எதுவுமே உங்கள் கைகளுக்குக் கிடைக்காது. பெற்றோர்களை பிரிந்து அல்லது இழந்து வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
தலையில் சுழிகள் வலது, இடது என்று மாறி மாறி அமைந்திருந்தால் கஷ்டமும், மகிழ்ச்சியும் மாறி மாறி வரும் என்று பொருள். இதில் சுழிகள் வலதுபுறத்தில் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் நல்ல பலன்களும் இடது புறத்தில் அதிகமாக இருந்தால், கெட்ட பலன்களும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இரட்டை சுழி இருந்தால், இரண்டு கல்யாணம் நடைபெறும் என்று சொல்வதெல்லாம் உண்மையல்ல. நம் தலையில் இருக்கும் சுழி என்பது, பிரம்மா ஒரு ஜீவனின் விதியை நிர்ணயித்து இறை நீதிக்கு உட்பட்டு ஒரு சுழியுடன் குழந்தையை பிறக்க வைப்பார். தலையில் உள்ள சுழியை கையொப்பம் என்று கூறுகிறார்கள். பிரம்மா எழுதிய கையெழுத்தை சற்று மாற்றி, ஆதிசிவன் கையொப்பம் இடுவதையே இரட்டை சுழி என்று கூறுகிறார்கள். இதுவே மூன்று சுழி தலையில் இருப்பவர்களுக்கு முதலில் பிரம்மாவும், அடுத்து பார்வதி தேவியும் கையொப்பம் இட்ட பிறகு கடைசியாக ஆதிசிவன் தலையெழுத்தை சற்று மாற்றி கையொப்பம் இட்டால், அதுவே மூன்று சுழி என்று சொல்லப்படுகிறது.