அகஸ்திய முனிவரின் சீடர்களுள் ஒருவன் இடும்பன். குருவின் கட்டளைக்கிணங்க இடும்பன் கவுதடி என்னும் தடியின் இரு புறங்களிலும் சிவகிரி மற்றும் சக்தி கிரி என்னும் இரண்டு மலைகளை கட்டி தொங்கவிட்டு பொதிகை மலையை நோக்கி சென்றான். செல்லும் வழியில் பழனி என்ற இடம் வந்தது. தடியுடன் மலைகளை கீழே வைத்தான் களைப்பு தீர இளைப்பாறி முடிந்ததும் மலையை தூக்க முயன்றான்.
முருகன் இவ்விரு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெற செய்யவும் இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். முருகன் சிறுவனாக வந்து இடும்பனின் தோல்வியை கேலி செய்தான். சிறுவன் முருகன்தான் என அறியாத இடும்பன், சிறுவனை பிடிக்க முயற்சித்தான். தனது முயற்சியின்போது அவன் தவறுதலாக கீழே விழுந்து விட்டான். பின்னர் முருகன் இடும்பனை காப்பாற்றி இடும்பனின் வேண்டுகோளுக்கு இணங்க பழனி முருகனின் காவல் தெய்வமாக இருக்க அருளினார். மேலும், காவடி சுமந்து வரும் பக்தர்களின் குறைகளுக்கு நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற வரத்தினையும் கேட்டு வாங்கினான் இடும்பன். அன்றிலிருந்து காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கு முருகப்பெருமான் பெருமாள் அருள்புரிவதாக ஐதீகம்.
காவடிகளில் மொத்தம் இருபது வகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. ஒவ்வொரு வகை காவடிக்கும் ஒவ்வொரு வகை பலன் என்று கூறப்படுகிறது. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது.
இனி, எந்த காவடி எடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா?
தங்கக் காவடி எடுப்பதனால் நீடித்த புகழ் கிடைக்கும். வெள்ளி காவடி எடுப்பதனால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். பால் காவடி எடுப்பதனால் செல்வச் செழிப்பு உண்டாகும். சந்தனக் காவடி எடுப்பதனால் வியாதிகள் நீங்கும். பன்னீர் காவடி எடுப்பதனால் மனநல குறைபாடுகள் விலகும். சர்க்கரை காவடி எடுப்பதனால் சந்தான பாக்கியம் உண்டாகும். அன்னக்காவடி எடுப்பதனால் வறுமை நீங்கும். இளநீர் காவடி எடுப்பதனால் சரும நோய்கள் நீங்கும்.
அலங்கார காவடி எடுப்பதனால் திருமணத் தடை நீங்கும். அக்னி காவடி எடுப்பதனால் திருஷ்டி தோஷம், பில்லி சூனியம் மற்றும் செய்வினை நீங்கும். கற்பூர காவடி எடுப்பதனால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும். சர்ப்பக் காவடி எடுப்பதனால் குழந்தை வரம் கிடைக்கும். மஞ்சள் காவடி எடுப்பதனால் வெற்றி கிடைக்கும். சேவல் காவடி எடுப்பதனால் எதிரிகள் தொல்லை நீங்கும். மலர் காவடி எடுப்பதனால் நினைத்தது நிகழும்.
தேர்க்காவடி எடுப்பது, நோய்வாய்ப்பட்டவர் உயிர்பிழைக்க வைத்ததற்கு முருகனுக்கு நன்றி தெரிவிக்க எடுக்கும் காவடி. மச்சக்காவடி எடுப்பதனால் வழக்கு விஷயங்களில் இருந்து விடுபட தீர்ப்பு கிடைக்கும். மயில் காவடி எடுப்பதனால் இல்லத்தில் இன்பம் நிறையும். குடும்பப் பிரச்னைகள் நீங்கும். பழக்காவடி எடுப்பதனால் தொழிலில் நலம் பெருகும், லாபம் கிடைக்கும். வேல் காவடி எடுப்பதனால் எதிரிகள் நம்மை பார்த்து அஞ்சுவர்.
தைப்பூச நன்னாளில் முருகப்பெருமான் மீது முழு மன நம்பிக்கையுடனும் சரியான முறையில் விரதங்களைக் கையாண்டும் காவடி எடுத்தால் வேண்டியது வேண்டியபடி அருள்வார் வேலவன்.