பத்மாவதி தாயாரின் முற்பிறவி கதை தெரியுமா?

Sri Padmavathi Thayar
ஸ்ரீ பத்மாவதி தாயார்

திருப்பதி வேங்கடேசப் பெருமாளின் மனைவி பத்மாவதி தாயார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பத்மாவதி தாயார் யார், அவரது முற்பிறவி வரலாறு என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வேதவதி என்னும் ஒரு பெண் சிறு வயது முதல் நாராயணனே தனக்கு கணவனாக வர வேண்டும் என்று வேண்டித் தவம் இருந்தாள். பல அரசர்கள் அவளை மணந்து கொள்ள முன் வந்தும் அவள் தனது முடிவில் உறுதியாக இருந்தாள்.

ஒரு சமயம் அவள் தவமிருந்த வழியே சென்ற இலங்கை வேந்தன் ராவணன் அவளுடைய அழகில் மயங்கி, அவள் அருகில் சென்று அவளது தவத்தைக் கலைத்தான். வேதவதி கண் திறந்து அவனின் கோர உருவம் கண்டு பயந்து போனாள். அப்போது ராவணன் அவளிடம், "தேவி நான் 14 உலகங்களையும் வென்றவன். உன்னைப் போன்ற ஒரு கட்டழகியை இதுவரை கண்டதில்லை. உன்னைப் பார்த்தவுடன் என் மனம் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விழைகிறது. தவத்தை விட்டு எழுந்து இலங்கையின் பட்டத்து ராணியாக எனது மனைவியாக வாழலாம் வா"  என்று அழைத்தான். மனதில் பயம் இருந்தாலும் சினத்துடன், "ராவணனே, நாராயணனைத் தவிர நான் வேறொருவரை மணம் செய்து கொள்ள மாட்டேன். இப்போதும் அவரை நினைத்துத்தான் தவம் செய்கிறேன். அவர் என்னை மணந்து கொள்ளாவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வேனே தவிர, மற்றொருவரை கனவிலும் நினைக்க மாட்டேன். எனவே, நீ வந்த வழியே செல்" எனக் கூறினாள்.

உடனே ராவணன் சினத்துடன்,  "யார் அந்த நாராயணன்? என் பெயரைக் கேட்டால் அவனும் நடுங்கிப் போவான். மூவுலகை வென்ற நான் நேரில் வந்து கேட்டும் கூட நீ மறுக்கின்றாய். உன்னை வலுக்கட்டாயமாக என் வசம் ஆக்குகிறேன். அப்போது உன்னை யார் காப்பாற்றுவார்கள் என்று பார்க்கலாம்" என்று அவளைத் தொடப் போனான்.

அவனால் தனது தவத்துக்குக் கேடு விளையும் என்று எண்ணி அவள் மிகவும் கோபமாக, "மூடனே விருப்பமில்லாத என்னை பலாத்காரம் செய்ய முன்வந்து விட்டாயே. நான் இப்போதேநெருப்பில் விழுந்து சாம்பலாகப் போகிறேன். என்னைப் போல் ஒரு பெண்ணால் நீயும் உனது குலமும்  நாசமாகும் " என்று சபித்து தனது யோகத்தால் உண்டான நெருப்பில்  விழுந்து சாம்பலானாள்.

சில காலத்துக்குப் பிறகு ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போகும் சமயத்தில் அக்னி பகவான் சீதையைக் காப்பாற்ற அவன் குறுக்கே வந்தார். "ராவணனே நீ தூக்கிக் கொண்டு போகும் சீதை மாய சீதை. உண்மையான சீதையை ராமன் என்னிடம் அடைக்கலமாகத் தந்துள்ளார். இந்த மாய சீதையை என்னிடம் விட்டுவிடு. உனக்கு உண்மையான சீதையை நான் தருகிறேன்" என்று கூற, அதை நம்பிய ராவணனும் தன்னிடமிருந்து நிஜ சீதையை விட்டு விட, அக்னி பகவான் தன்னுள் சாம்பலாய் கிடந்த வேதவதியை ராவணனிடம் கொடுத்து உண்மை சீதையை தனக்குள் மறைத்துக் கொண்டார்.

ராவண வதத்திற்குப் பிறகு சீதை நெருப்பில் விழுந்து இந்த உலகத்துக்கு தனது கற்பின் மகிமையை தெரிவித்தாள். அப்போது நெருப்பில் விழுந்தது மாய சீதையான வேதவதிதான். ஆகையால், உண்மையான சீதையையும் வேதவதியையும் அக்னி பகவான் ராமனிடம் ஒப்படைத்து வேதவதியையும் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். அப்போது ஸ்ரீராமர், "நான் இந்த அவதாரத்தில் ஒரு மங்கையைத்தான் மணந்து கொள்வேன். ஆகையினால் அடுத்து வரும் கலியுகத்தில் இந்த வேதவதியை திருமணம் செய்து கொள்கிறேன்" எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்:
நைலிச மனப்பான்மை என்றால் என்ன? அதிலிருந்து விடுபட உதவும் யோசனைகள்!
Sri Padmavathi Thayar

இந்தக் காரணத்தினால்தான் வேதவதி பத்மாவதி என்ற பெயரில் ஆகாச மன்னனுக்கு மகளாகக் கிடைத்தாள். ஆகாச மன்னன் வசிஷ்டரின் யோசனைப்படி தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் பொருட்டு தகுந்த இடத்தை தங்க ஏர் கொண்டு  சீர்படுத்தும்போது அந்த ஏர் பூமியின் அடியில்  ஒரு அழகான பெட்டியின் மேல் இடித்தது. அங்கு பூமியை தோண்ட, அந்தப் பெட்டியில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையும் ஒரு அழகான பெண் குழந்தையும் இருந்தது கண்டு மகிழ்ந்தான் மன்னன்.

அப்போது ஒலித்த அசரீரி, "அரசே நீ பெரும் பாக்கியசாலி. இக்குழந்தையை  எடுத்து வளர்ந்து பெரியவளாக்கு. இக்குழந்தையால் உங்கள் குலம் புனிதமடையும்" என்று கூறியது. அதன்படி  அந்தக் குழந்தையை தனது மனைவி தரணி தேவியிடம் தந்தார் ஆகாச மன்னன்.

பத்மத்தில், அதாவது தாமரையில் கிடைத்த காரணத்தினால் பத்மாவதி (அலர்மேல் மங்கை) எனும் பெயர் சூட்டி அவளை சீரும் சிறப்புமாக வளர்த்து மானிடராக வந்த தெய்வம் ஸ்ரீநிவாசனுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com