மகாபாரதப் போரில் நிறைய வீரர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். ஆனால், மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்காக தனஞ் உயிரையே விட்டவர் யார் தெரியுமா? அது மட்டுமில்லாமல். மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவர் இவர் மட்டுமே. இதைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அர்ஜுனனுக்கும், நாக இளவரசியான உலுப்பிக்கும் அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களும் பொருந்திய மகனாகப் பிறக்கிறார் அரவான். குருக்ஷேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக காளி தெய்வத்திற்கு தன்னையே பலியிடுவதற்கு சம்மதிக்கிறார் அரவான். ஆனால், தான் சாவதற்கு முன்னால் இரண்டு ஆசைகள் இருப்பதாகக் கூறுகிறார் அரவான். முதலாவதாக, தான் திருமணம் செய்துக் கொண்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்றும், இரண்டாவதாக மகாபாரதப் போரை தான் முழுமையாகக் காண வேண்டும் என்றும் கேட்கிறார்.
நாளைக்கு இறக்கப் போகிறவரை திருமணம் செய்துகொள்ள யாருமே சம்மதிக்கவில்லை. இதனால் கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை திருமணம் செய்துக் கொள்கிறார். அரவான் இறந்த பிறகு விதவைக் கோலம்பூண்டு அனைத்து சடங்குகளையும் செய்கிறார்.
இந்த நிகழ்வுதான் கூத்தாண்டவர் வழிபாட்டின் மையமாக இருக்கிறது. இதனால் மோகினியாக தங்களை உணரும் அரவாணிகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை கொண்டாடுகிறார்கள். முதல் நாள் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். அடுத்த நாளே கணவன் இறந்ததால், விதவை கோலம் பூண்டு தாலியை அறுத்து அழுது புலம்புகிறார்கள். இவ்வாறே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது.
அரவானின் இன்னொரு ஆசை குருக்ஷேத்திரப் போரை முழுமையாகக் காண வேண்டும் என்பதாகும். இதற்கு கிருஷ்ணர் என்ன கூறினார் என்றால், ‘உன்னை பலியிட்ட பிறகு உனது தலைக்கு மட்டும் உயிர் இருக்கும். குருக்ஷேத்திரத்தின் அருகில் உள்ள குன்றின் மீது உனது தலை வைக்கப்படும். உன் கண்களால் போர் முழுவதையும் நீ காணலாம்’ என்று கூறினார்.
அரவானை பலியிட்ட பிறகு அவன் தலை குன்றின் மீது வைக்கப்பட்டது. பதினெட்டு நாட்கள் மகாபாரதப் போரையும் முழுமையாகப் பார்த்த பெருமை அரவானையே சேரும். இந்த நிகழ்வை மையமாகக் கொண்டுதான் திரௌபதி வழிபாடு தோன்றியது.