Thayamangalam muthumari amman
Thayamangalam muthumari ammanImage Credits: temple@dinamalar

தாய்மை வரமளிக்கும் தாயமங்கலம் முத்துமாரி அம்மன்!

Published on

துரை மீனாட்சியம்மன் முத்துமாரியம்மனாக உருமாறி சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் அவதரித்த வரலாறு பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

முற்காலத்தில் ராமநாதபுரத்து வணிகர்களுள் ஒருவரான முத்துப்பல் செட்டியார் தன்னுடைய பொருட்களை எல்லாம் மதுரைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இவர் மதுரை மீனாட்சியம்மனின் தீவிர பக்தர் ஆவார். இவருக்கு குழந்தைகள் கிடையாது. மதுரைக்குப் போகும் போதெல்லாம், மீனாட்சியம்மனிடம் தனக்குக் குழந்தைப்பேறு வேண்டும் என்று வேண்டிக்கொண்டுதான் வருவார்.

ஒரு நாள் வியாபாரம் முடித்துவிட்டு வரும்போது, வழியிலே ஒரு சிறுமி நின்று அழுதுக்கொண்டிருக்கிறாள். இவரும் அந்த சிறுமியிடம் சென்று, ‘ஏன் அழுகிறாய்?’ என்று விசாரித்திருக்கிறார். அதற்கு அந்த சிறுமி தன்னுடைய தாய், தந்தையை தொலைத்துவிட்டதாகவும், எங்கே போவது? என்றே தெரியவில்லை என்றும் சொல்லியிருக்கிறாள்.

இந்த சிறுமியை மதுரை மீனாட்சியம்மன்தான் தனக்குக் கொடுத்திருக்கிறார் என்று எண்ணிய முத்துப்பல் செட்டியார். அந்த சிறுமியை சந்தோஷமாக தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். வரும்வழியில் சிறுமியை குளக்கரையில் அமர வைத்துவிட்டு தன்னுடைய பயணக்களைப்பு நீங்குவதற்காக குளத்தில் இறங்கி நீராடுகிறார். நீராடி முடித்த பிறகு மேலே வந்து பார்த்தால், சிறுமியை காணவில்லை. எல்லா இடத்திலும் தேடுகிறார். ஆனால், அந்த சிறுமி அங்கில்லை.

மிகவும் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் நடந்தது அனைத்தையும் சொல்கிறார். அன்றிரவு சப்பிட்டுவிட்டு தூங்கப் போகிறார். அவரது கனவில் தோன்றிய அம்பிகை, இன்று சிறுமியாக வந்தது தானே என்றும், அங்கிருக்கும் கள்ளிக்காட்டில் உறையப்போவதாகவும், தன்னை நாடி வருபவர்களை தாயாக இருந்து காக்கப்போவதாவும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு தானே குழந்தையாக வந்து பிறப்பதாகவும் சொல்லி மறைகிறார்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீரங்கம் பெருமாளை ‘நம்பெருமாள்’ என்று கூப்பிடக் காரணம் என்ன தெரியுமா?
Thayamangalam muthumari amman

அவரும் அடுத்த நாள் அங்கிருக்கும் கள்ளிக்காட்டிற்கு சென்று ஆற்று மணலில் அம்பிகை சிலையை வடிவமைத்து கும்பிட ஆரம்பிக்கிறார்.

இக்கோயிலில் அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களோடு கேட்கும் வரங்களை கொடுக்கும் கற்பக விருட்சமாகத் திகழ்கின்றாள். திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருவதையும், வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செய்வதையும் காணலாம். சிறுமியாக வந்த இவளை கன்னி தெய்வமாகவே பாவித்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். எனவே, திருமணத்திற்காக தாலி வாங்கி அணிவிக்காமல் தாலிப்பொட்டு செய்து அதை பாதத்தில் வைத்து பூஜிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அதிசயம் பொருந்திய இக்கோயிலைச் சென்று ஒருமுறை தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.

logo
Kalki Online
kalkionline.com