வெற்றிலை மாலையின் சக்தி என்ன தெரியுமா? அனுமனுக்கு சாத்தப்படும் மாலையில் எத்தனை வெற்றிலைகள் வைக்க வேண்டும்? வெற்றிலை மாலை சாத்தினால் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வெற்றிலை மாலையை ஏன் ஆஞ்சனேயருக்கு சாத்த வேண்டும் என்று புராணங்களில் விரிவாகவே விளக்கப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை கண்டுபிடிக்க ஆஞ்சனேயர் கிளம்பிச் சென்றார். அங்கு பலகட்ட போராட்டம், நீண்ட தேடுதலுக்கு பிறகு சீதையை அசோக வனத்தில் கண்டுபிடித்தார். ஸ்ரீராமர் நலமுடன் இருப்பதாக சீதையிடம் ஆஞ்சனேயர் கூறி, ராமர் தந்த மோதிரத்தை சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சனேயர். இதனால் மிகவும் மகிழ்ச்சியுற்ற சீதா தேவி, பணிந்து வணங்கி நிற்கும் ஆஞ்சனேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால், அந்த நேரத்தில் அட்சதை பொருட்கள் தன்னிடம் இல்லாததால், அருகிலிருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து இலைகளைப் பறித்து, ஆஞ்சனேயர் மீது தூவி ஆசீர்வதித்தாராம். பிறகு அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்குப் போட்டு மகிழ்ந்தாராம். அப்போது முதல் ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது வழக்கமானதாக கூறுகிறார்கள். ஆனால், வேறு எந்த தெய்வத்திற்கும் வெற்றிலை மாலை சாத்தக் கூடாதாம். அதற்கு பதிலாக வெற்றிலை - பாக்கு தாம்பூலமாகப் படைத்து வழிபடலாம்.
எப்போதுமே, வெற்றிலை மாலைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையிலேயே கட்ட வேண்டும். காம்பு பகுதியை கிள்ளிவிட்டு, நடுப்பக்கத்தில் பாக்கு வைத்து கட்டி, மாலையாகத் தொடுக்கலாம். வெறும் வெற்றிலைகளை மாலையாகக் கட்டக் கூடாது. ஆனால், வெற்றிலைகளை எத்தனை எண்ணிக்கையிலும் வைத்து பெரிய மாலையாகக் கட்டலாம். எனவே, சனிக்கிழமை, அமாவாசை, மூலம் நட்சத்திரம் வரும் நாட்களில் வெற்றிலை மாலையை அனுமனுக்கு சாத்தி வழிபடலாம்.
மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு குறைவாக இருந்தால் 9 எண்ணிக்கையில் வெற்றிலை கட்டுகள் வைத்து மாலை கட்டி விநாயகர் அல்லது அனுமானுக்கு சாத்த வேண்டும். வேலை சிக்கல், குடும்ப சிக்கல் என்றால் 11 வெற்றிலையை மாலையாகக் கட்டி சுவாமிக்கு சாத்தலாம். வறுமை நீங்கி பணம் தங்கவும், சுபகாரியம் நடைபெறவும், 21 வெற்றிலைகளை, பாக்குடன் சேர்த்து மாலையாகக் கட்டி ஆஞ்சனேயருக்கு அணிவிக்க வேண்டும்.
ஒருவருக்கு பல பிரச்னைகளுமே இருக்குமாயின் அனுமனுக்கு 108 வெற்றிலை கொண்ட மாலை சாத்தி, தயிர் சாதம் நைவேத்தியமாகப் படைத்து வணங்கி வர வேண்டும். ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவதால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகளுக்கு புத்தி கூர்மையாகும். படிப்பில் நாட்டம் ஏற்படும். நினைவுத்திறன் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையேயான சிக்கல் தீரும். தொழில் விருத்தியடையும். மனக்குழப்பம், பயம் நீங்கி, துணிச்சலும், தன்னம்பிக்கையும் பெருகும்.
அதேபோல, ஒவ்வொரு சனிக்கிழமை, அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ஒன்பது வாரம் தொடர்ந்து ஆஞ்சனேய பெருமானுக்கு வெற்றிலை மாலை சாத்தி வேண்டிக்கொண்டால், வேண்டுவதெல்லாம் கிடைக்கும். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பதுடன், இழந்த பதவியையும் பொருளையும் மீட்டுத் தந்தருளுவார் என்கிறார்கள் பக்தர்கள்.
அதுமட்டுமல்ல, வெற்றிலை மாலை சாத்தி பிரார்த்தித்து வந்தால், நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானின் பாதிப்புகளில் இருந்தும் தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழங்குவது கூடுதல் விசேஷமானது.