கோயிலுக்கு அழகு சேர்ப்பவை கலைநயத்தோடு அமைக்கப்பட்ட மண்டபங்கள்தான். ஒவ்வொரு கோயிலிலும் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் போன்றவை தவறாமல் அமைந்திருக்கும். இதைத் தவிர பல மண்டபங்கள் கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
அர்த்த மண்டபம்: கருவறைக்கு முன்னால் அமைந்துள்ள மண்டபம் அர்த்த மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. கருவறையைப் போன்று சிறிய அளவிலேயே அமைந்திருக்கும். கருவறையின் அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த மண்டபம் அமைக்கப்படுகிறது.
ஸ்நபன மண்டபம்: அர்த்த மண்டபத்திற்கும் மகா மண்டபத்திற்கும் இடையில் அமைந்திருக்கும் மண்டபம் ஸ்நபன மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இம்மண்டபம் அபிஷேக மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. சில கோயில்களில் மகாமண்டபமும் ஸ்நபன மண்டபமும் சேர்ந்தே அமைக்கப்பட்டிருக்கும்.
மகா மண்டபம்: கருவறை, அர்த்த மண்டபத்தை அடுத்து அமைந்துள்ள சற்று பெரிய மண்டபம் மகாமண்டபம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் இந்த மண்டபத்தில் நின்று இறைவனை தரிசிக்கலாம்.
நந்தி மண்டபம்: சிவாலயங்களில் கருவறையில் காட்சி தரும் சிவலிங்கத்தை தரிசித்தவாறு ஒரு சிறிய மண்டபத்தில் நந்தியெம்பெருமான் அமர்ந்திருப்பார். இம்மண்டபமே நந்தி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
நாலுகால் மண்டபம்: நாலுகால் மண்டபம் பல கோயில்களில் வெளியே அமைக்கப்பட்டிருக்கும். சில கோயில்களில் உள்ளேயும் இம்மண்டபம் காணப்படும்.
பதினாறுகால் மண்டபம்: பதினாறு கல் தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மண்டபங்கள் பதினாறு கால் மண்டபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பெரிய கோயில்களில் பதினாறு கால் மண்டபங்கள் காணப்படும்.
நூற்றுக்கால் மண்டபம்: நூறு கல் தூண்களைக் கொண்டு கலை நயத்துடன் அமைக்கப்பட்ட மண்டபங்கள் நூற்றுக்கால் மண்டபம் என்று அழைக்கப்படுகின்றன.
ஆயிரங்கால் மண்டபம்: ஆயிரம் கல் தூண்களைக் கொண்டு கலை நயத்துடன் அமைக்கப்பட்ட மண்டபங்கள் ஆயிரங்கால் மண்டபம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மண்டபம் சற்று அரிதான மண்டபமாகும். காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும், புதுக்கோட்டை குடுமியான்மலை சிவன் கோயிலிலும் ஆயிரங்கால் மண்டபங்களைக் காணலாம்.
வாகன மண்டபம்: வாகன மண்டபம் என்பது இறைவனுக்குரிய வாகனங்களை வைக்கப் பயன்படும் ஒரு மண்டபமாகும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு வாகனம் உண்டு. யானை வாகனம், குதிரை வாகனம், கருட வாகனம், மயில் வாகனம் என பலப்பல வாகனங்கள் உண்டு. இவை பெரும்பாலும் மரத்தினால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
வாத்திய மண்டபம்: ஆலயங்களில் தினந்தோறும் காலைசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்த சாமம் என ஐந்து கால வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த வழிபாடுகளின்போது பல வகையான வாத்தியங்கள் இசைக்கப்படுவது வழக்கம். தினசரி வழிபாடு மற்றும் விழாக்காலங்களில் இவர்கள் இசை வழிபாடு செய்வார்கள். இவர்கள் இசை வழிபாடு செய்ய ஒரு மண்டபம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மண்டபமே வாத்திய மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
நிருத்த மண்டபம்: கோயில்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட மண்டபம் நிருத்த மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
நீராழி மண்டபம்: ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தீர்த்தம் உண்டு. பெரிய கோயில்களில் இத்தகைய குளங்கள் பெரிய அளவில் காணப்படும். இத்தகைய தீர்த்தங்களின் நடுவில் ஒரு மண்டபம் அமைக்கப்பட்டிருக்கும். நீர் சூழ அமைந்துள்ள காரணத்தினால் இந்த மண்டபமானது நீராழி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.