திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தினமும் விரதமிருந்து வழிபடுவதையே தமது முதற்பணியாகக் கொண்டிருந்தார் பத்மநாபர் எனும் முனிவர். இவர் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் பெருமாளை வழிபட்டு வந்தார். ஒரு நாள் அங்கிருந்த குளக்கரையில் பிரகாசமான ஒளி ஒன்று அவர் முன்பு தோன்ற, அதில் பெருமாள் முனிவருக்குக் காட்சி தந்து, “பத்மநாபா இந்த குளக்கரையிலேயே தங்கியிரு. உரிய காலத்தில் என்னை சேரும் பாக்கியம் பெறுவாய்” என்று வரம் தந்து மறைந்தார்.
ஒரு நாள் முனிவர் குளக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தபோது மனிதர்களை உண்ணும் அரக்கன் ஒருவன் அவரைப் பிடிக்க வந்தான். “பெருமாளே, ஏழுமலையானே என்னைக் காப்பாற்று” என்று முனிவர் கதற, பெருமாளும் தனது திருக்கை சக்கரத்தை ஏவ, அது அரக்கனின் தலையை கொய்தது.
சக்கரத்தின் மகிமையை அறிந்த முனிவர், “எனது உயிரைக் காத்த சக்கரமே, இன்று முதல் இந்தக் குளத்தில் தாங்கள் எழுந்தருளி இதில் நீராடுவோரின் துன்பத்தைத் தீர்க்க வேண்டும்” என்று வேண்டினார். அதுமுதல் அந்தக் குளம் ‘சக்கர தீர்த்தம்’ என திருப்பதி திருமலையில் இன்றும் விளங்கி வருகிறது.
பெருமாளின் கையில் உள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என வணங்குகிறோம். பத்மநாப முனிவரின் வரலாற்றைப் படிப்போருக்கும் கேட்போருக்கும் திருமலை திருப்பதி போகாமலேயே அந்தத் தீர்த்தத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.
திருமலை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் திருமலை திருப்பதி பாலாஜி கோயிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது சக்கர தீர்த்தம். திருமலை திருப்பதி பிரம்மோத்ஸவ விழாவின்போது ஸ்ரீ வேங்கடேசர் உத்ஸவச் சிலை இங்குக் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடைபெறும். வராக புராணத்தின்படி சேஷாசலம் மலைத் தொடரில் உள்ள ஏழு முக்கிய முக்தி தீர்த்தங்களில் சக்கர தீர்த்தமும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இந்தத் தீர்த்தத்தின் அருகிலேயே சிறிய சிவலிங்கம் மற்றும் விநாயகர் திருச்சிலைகள் உள்ளன. பிரபஞ்சத்தில் உள்ள மூன்று கோடி புண்ணிய நீரோடைகளும் இந்நாளில் சக்கர தீர்த்தத்தில் வந்து வசிப்பதாக ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பதி கோயிலிலிருந்து பட்டர்கள் மற்றும் பிற ஊழியர்கள் புனித மேளம் மற்றும் பாரம்பரிய இசை முழங்க சக்கர தீர்த்தத்தை அடைவார்கள். பின் சக்கர தீர்த்தத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு மலர் அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.