ராமேஸ்வரத்தில் மரைக்காயர் என்பவர் வறுமையின் பிடியில் இருந்தும் நம்பிக்கையுடன் தினமும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இவர் பாய்மரப் படகில் சென்று மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு நாள் அவர் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது பெரிய சூறாவளி காற்று ஒன்று அவரது படகை எங்கேயோ அடித்து இழுத்துச் சென்று விட்டது. சிறிது நேரத்தில் பாசிப்படிந்த ஒரு பாறையின் மீது படகு இடித்து நின்றுவிட்டது. அந்தப் பாசிப்படிந்த பாறை சரிந்து படகில் விழுந்தது. இரண்டு சின்ன பாறையும், ஒரு பெரிய பாறையும் அவர் படகில் விழுந்தன. அதுவரைக்கும் அடித்துக்கொண்டிருந்த சூறாவளிக் காற்று நின்றது.
மரைக்காயர் திரும்பி வர வழியைத் தேடினால், அவருக்கு திக்கும் தெரியவில்லை, திசையும் தெரியவில்லை. சிவபெருமானை மனதில் நினைத்துக்கொண்டு எப்படியோ கடலில் பல நாட்கள் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு வழியைக் கண்டுபிடித்து ஊர் வந்து சேர்ந்தார் மரைக்காயர். அவர் உயிருடன் வீடு திரும்பியதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர் மரைக்காயரின் குடும்பத்தினர்.
படகில் கொண்டு வந்த பாசிப்படிந்த கற்கள் என்னவென்று தெரியாமல், வீட்டின் படிக்கற்களாக போட்டு வைத்தார் மரைக்காயர். அந்தப் பாறையின் மீது ஆட்கள் நடக்க நடக்க அதன் மீது இருந்த பாசி விலகி ஒரு நாள் சூரிய ஒளியில் பாறை பளப்பளவென்று மின்னியது.
தனது வறுமையைப் போக்க சிவபெருமான் காட்டும் வழி இது என்று எண்ணினார் மரைக்காயர். நடந்த அனைத்தையும் அரசரிடம் சென்று கூறி தனது வீட்டில் பெரிய பச்சைப் பாறை ஒன்று உள்ளதாகச் சொன்னார். மன்னன் ஆட்களை அனுப்பி அந்தப் பாறையை எடுத்து வரச் சொன்னார். வீரர்களும் அந்தப் பாறையை எடுத்து வந்து மன்னரிடம் காட்ட, அரசர் அந்தக் கற்களை விவரம் தெரிந்த ஒருவரிடம் காட்ட, அதை சோதித்துப் பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டு போனார் அவர். ‘இது விலை மதிக்க முடியாத அபூர்வ மரகதக்கல். உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது’ என்று சொன்னார். உடனே மன்னரும் மரைக்காயருக்கு அந்தப் பச்சை பாறைக்கு இணையான தங்கக் காசுகளை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
இந்த அற்புதமான மரகதக்கல்லில் நடராஜர் சிலை ஒன்றை வடிக்க வேண்டும் என்பது மன்னரின் ஆசையாக இருந்தது. அதற்காக சிற்பியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் இலங்கையில் உள்ள சிற்பியான சிவபக்தன் ரத்தின சபாபதியை பற்றிய விவரம் கிடைத்தது.
அந்த சிற்பியை அனுப்பி வைக்கும்படி இலங்கை மன்னனுக்கு ஓலை அனுப்பினார் அரசர். சிற்பியும் வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகதக்கல்லைப் பார்த்து மயங்கியே விட்டார் சிற்பி. ‘என்னால் இந்த சிலையை வடிக்க முடியாது மன்னா!’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். மன்னன் மன வருத்தத்துடன் உத்திரகோசமங்கை கோயிலில் சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ‘நான் அந்த மரகதலிங்கத்தை வடித்து தருகிறேன் மன்னா!' என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசையில் மன்னர் பார்க்க, அங்கே சித்தர் சண்முக வடிவேலர் இருந்தார்.
மன்னரின் கவலை நீங்கியது. மரகத நடராஜரை வடிவமைக்கும் முழுப்பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார் மன்னர். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துக் கொடுத்தார்.
அந்தப் பெரிய மரகதக் கல்லில் 5 ½ அடி நடராஜரையும் 1 ½ அடி பீடத்துடன் சேர்த்து ராஜகோலத்தில் மிகவும் நுணுக்கமாக, மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியுமளவிற்கு செதுக்கியிருந்தார்.
பின்பு மன்னரை அழைத்து அந்த மரகத லிங்கத்தை நிறுவி பிறகு ஆலயத்தை அமைக்குமாறு கூறினார். அதனாலேயே இன்று மன்னர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என்று பல படை எடுப்புகளையும் தாண்டி நடராஜர் கம்பீரமாக நிற்கிறார். இன்று இந்த மரகத நடராஜரின் விலை பல லட்சம் கோடிகளை தாண்டும்.
மேளம் முழங்கப்பட்டால் மரகதம் உடைப்படும். மரகதம் இயற்கையாகவே மென்மையான தன்மையை கொண்டது. அதனால்தான் ஒலி, ஒளியிலிருந்து பாதுகாக்க சந்தனக்காப்பு இவருக்குப் பூசப்படுகிறது. வருடத்தில் ஒருமுறை மார்கழி மாதத்தில் வருகிற திருவாதிரை நாள் அன்று மட்டும்தான் சந்தனக்காப்பு களையப்பட்டு நடராஜர் சிலைக்கு சிறப்பான அபிஷேகம் செய்யப்படுகிறது.