மதுரையின் எல்லையில் அமர்ந்து அருளும் மடப்புரத்து காளியை பற்றியும், மடப்புரம் அருகில் காசிக்கு இணையான தலத்தின் சிறப்புகளைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகக் காணலாம்.
ஒரு சமயம் மதுரையில் பெரும் வெள்ளம் வந்து மதுரையே மூழ்கும் அளவிற்கு போனது. அப்போது மதுரையை மீனாட்சியும், சொக்கநாதரும் ஆட்சிபுரிந்து வந்தனர். மீனாட்சிஅம்மன் சொக்கநாதரிடம், ”வெள்ளத்தால் மதுரை முழுவதுமே சூழப்பட்டிருக்கிறது. இதனால் எல்லை தெரியவில்லை. எனக்கு எல்லையை காட்டுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.
உடனே சிவபெருமான் தனது கழுத்தில் இருந்த ஆதிசேஷனை எடுத்துப் போடுகிறார். ஆதிசேஷன் தனது உடலால் மதுரையை வளைத்து நின்றார். மேற்கே திருவீடகமும், தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே திருமாலிருஞ்சோலையையும் காட்டிய சிவபெருமான் கிழக்கிலே ஆதிசேஷனுடைய படத்தையும், வாலையும் சேர்த்து எல்லைக் காட்டினார். அதனால் இந்த இடத்திற்கு ‘படப்புரம்’ என்ற பெயர் வருவதற்குக் காரணமானது. அதுவே காலப்போக்கில் மருவி மடப்புரமானது.
ஈசன் தனது கைகளால் ஆதிசேஷனை இறுக்கிக் கட்ட ஆதிசேஷன் வாயிலிருந்து விஷம் வெளிவந்தது. மக்களை காப்பாற்றும் பொருட்டு ஆதிசேஷனின் வாயிலிருந்து வந்த விஷத்தை அம்பாள் உண்டு ஆங்கார ரூபிணியாக, காளியாக எழுந்தருளினார். அவள்தான், ‘மடப்புரத்து காளி.’
மடப்புரத்திற்கு அருகேயுள்ள வைகையாற்றில் நீராடினால் காசியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு சமயம் சிவபெருமான் பார்வதி தேவியை கூட்டிக்கொண்டு வேட்டைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மடப்புரம் வந்ததும், பார்வதி தேவியை அங்கேயே இருக்கும்படியும், தான் மட்டும் வேட்டைக்குச் சென்றுவிட்டு வருவதாகவும் ஈசன் கூறினார். ஆனால், பார்வதி தேவியோ, ‘நான் ஏன் இங்கு இருக்க வேண்டும். அப்படி இந்த இடத்திற்கு என்ன சிறப்பு இருக்கிறது?’ என்று கேட்டார்.
அதற்கு சிவபெருமானோ, ‘இந்த இடத்திற்கு அருகில் உள்ள வைகையாற்றில் நீராடினால் காசியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறுகிறார். இதனால் பார்வதி தேவியும் அந்த இடத்தில் காளியாக தங்கிவிட்டாள். அவள்தான் மடப்புரத்து காளி என்றும் கூறப்படுகிறது.
பார்வதி தேவிக்கு துணையாக இங்கு அய்யனார் இருக்கிறார். இந்த இடத்தில் உள்ள அய்யனாருக்கு ‘அடைக்கலம் காத்த அய்யனார்’ என்கிற பெயரும் உண்டு. மடப்புரத்திற்கு அருகில் ஓடும் வைகையில் நீராடினால் காசியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இன்றைய வரைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காசிக்குப் போக முடியாதவர்கள் மடப்புரத்திற்கு அருகேயுள்ள திருபுவனத்துக்கு வந்து தன்னுடைய முன்னோர்களுக்கு காரியம் செய்துவிட்டு புண்ணியம் சேர்த்துக்கொள்வது இன்று வரைக்கும் இங்கு நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.