தர்மதுவசன் என்ற அரசனுக்கும் அவரது மனைவி மாதவி என்ற மகாராணிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அந்தக் குழந்தைக்கு ‘பிருந்தா’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். வளர்ந்து ஆளானதும் அந்தப் பெண் கிருஷ்ணனையே மணக்க வேண்டும் என்று நினைத்து காட்டில் கடும் தவம் மேற்கொண்டாள். இந்த நேரத்தில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்ததாக புராணங்கள் சொல்லும் ஜலந்தரன் என்ற அசுரன், பிருந்தா தவம் செய்து கொண்டிருந்த வனத்திற்கு வந்தான். இவனை சங்கசூடன் என்றும் அழைப்பார்கள். கிருஷ்ணனை அடைய வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருந்த பிருந்தா சங்கசூடனைக் கண்டதும் மனம் மாறினாள். அவனை கந்தர்வ திருமணம் செய்து கொண்டாள். பதிவிரதையான பிருந்தாவை திருமணம் செய்து கொண்டதால் சங்கசூடனின் பலம் அபரிமிதமாக மாறியது. அவன் மகிழ்ச்சியுடன் அனைத்து உலகங்களையும் வென்றான்.
இதையடுத்து, தேவர்கள் அனைவரும் கிருஷ்ணரை சந்தித்து சங்கசூடனுடன் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டினர். அவரும் தேவர்களுக்காக சங்கசூடனுடன் போரிட்டார். ஆனால், கர்ணனை போல கவச, குண்டலத்துடன் பிறந்திருந்த சங்கசூடனை வெற்றிகொள்ள முடியவில்லை. அதுகுறித்து யோசிக்கும்போதுதான் சங்கசூடன் பெற்றிருந்த வரம் கிருஷ்ணரின் நினைவுக்கு வந்தது. சங்கசூடன் மனைவியின் பதிவிரதத் தன்மை எப்போது கெடுகிறதோ அப்போது அவன் இறந்து விடுவான் என்று பிரம்மனிடம் வரம் பெற்று இருந்தான்.
இந்த விஷயம் அறிந்ததும் கிருஷ்ண பகவான் சங்கசூடனை போல உருமாறி அவனுடைய அரண்மனையை அடைந்தார். தன்னுடைய கணவன் போரில் வெற்றி பெற்று வந்திருப்பதாக எண்ணிய பிருந்தா, கிருஷ்ணனின் காலில் நீரை ஊற்றி பாத பூஜை செய்தாள். கணவன் இல்லாத மற்றொரு ஆணின் காலைத் தொட்டதால் பிருந்தாவின் பதிவிரதத் தன்மை பறிபோனது. இதையடுத்து போர்க்களம் சென்ற பகவான் கிருஷ்ணர், சங்கசூடனுடன் போரிட்டு அவனைக் கொன்றார்.
கணவன் இறந்ததையறிந்த பிருந்தா, கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்கு வந்து, “நீ என் கணவனை வஞ்சகமாக அழித்தாய். உன் மனம் கல்லாய் போனது போல, நீயும் கல்லாய் போவாய்” என்று சாபமிட்டாள். அப்போது அங்கு வந்த ராதை, பிருந்தாவிடம் “கிருஷ்ணனை அடைவதற்காகத்தான் நீ தவம் செய்தாய். பின்னர் உன்னை அறியாமல் சங்கசூடனை திருமணம் செய்து கொண்டாய். அந்தத் தவறை உணராமல் நீ இப்போது கிருஷ்ணனையே சபிக்கிறாய். அதனால் நீ எதற்கும் உபயோகம் இல்லாத செடியாகப் போவாய்” என சாபம் கொடுத்தாள்.
அப்போது கிருஷ்ணர், ராதாவிடம் “பதிவிரதையின் சாபம் பலிக்கும். அந்த வகையில் பிருந்தாவின் சாபமும் பலிக்கப் போகிறது. அதேபோல் நீ கொடுத்த சாபமும் பலிக்கும். பிருந்தா சபித்தது போல நான் கண்டகி நதியில் கல்லாகி போவேன். என்னை சாளக்கிராமம் என்று அழைப்பார்கள். நீ சபித்தது போல பிருந்தா, ‘துளசி’ என்ற செடியாக மாறுவாள். என்னையும் துளசி செடியையும் சேர்த்து யார் பூஜிக்கிறார்களோ அவர்கள் எனது கோகுலத்தை அடைவார்கள்” என்று அருள்புரிந்தார். இன்றும் கண்டகி நதியில் சாளக்கிராமம் மூர்த்தங்களைப் பார்க்க முடியும்.
திருமாலின் அருவுருவ திருக்கோலம்தான் சாளக்கிராம கற்கள். அதனால்தான் திருமலை திருப்பதியில் நடைபெறும் பூஜைகளில் சாளக்கிராமத்திற்கு மிக முக்கியமான பங்கு உண்டு. திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவம் உள்ளதால் இந்த சாளக்கிராமக் கல்லை தினமும் வழிபாடு செய்து பலன் பெறலாம். கரிய நிற சாளக்கிராம கல்லை கண்ணனாக வழிபடும்போது கிடைக்கும் சிறப்புகள் ஏராளம். ஆனால், இந்தக் கற்கள் பெரும்பாலானோருக்கு கிடைத்து விடுவதில்லை. தினமும் சாளக்கிராம கற்களுக்கு பூஜை செய்து வரும்போது நம்முடைய மனம் தெளிவடையும்.
சாளக்கிராம கற்களுக்கு சந்தனம் பூசி, மலர் சூடி, தீப தூப ஆராதனைகள் செய்து நெய்வேத்தியும் படைத்து வழிபடலாம். இப்படி வழிபடுவதால் அவர்களுக்கு விஷ்ணு லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும். பன்னிரண்டு சாளக்கிராம கற்களை கொண்டு வழிபாடு செய்தால் பன்னிரண்டு கோடி சிவலிங்கங்களை வைத்து பன்னிரண்டு கல்ப காலம் பூஜை செய்த பலன் ஒரே நாளில் கிடைக்கப்பெறும்.