மருதாணியின் தாவரவியல் பெயர் ‘லா சோனியா இனொர்மிஸ்.’ இதற்கு மருதோன்றி, அழவணம் என்ற வேறு பெயர்களும் உண்டு. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல ஆண்டுகளாக மருதாணி ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளாமல், வெளிமருந்தாக மட்டுமே மருதாணி பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் உள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்குகிறது.
உடல் சூடு பொதுவாக இரண்டு வகைப்படும். சிறுநீர் கழிக்கும்போது தோன்றும் எரிச்சல் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அது சாதாரண சூடு. அதுவே, உடலில் நீண்ட நாட்கள் இருந்தால் அது மேகச்சூடாக மாறிவிடும். அதன் அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல். இதுவே தொடரும்போது உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படக் காரணமாகிறது. மருதாணி இந்த இரண்டு சூட்டையும் சரி செய்து உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. உள்ளங்கையில் மருதாணி வைப்பது அழகிற்கு மட்டுமல்ல. உள்ளங்கையில் நரம்புகளின் முடிவுகள், சிறிய இரத்த நாளங்கள் அதிகளவில் இருக்கும். இந்தப் பகுதிகளில் மருதாணி இடும்போது அந்தக் குளிர்ச்சி உடல் முழுவதும் பரவுகிறது.
மருதாணி இலை ஒரு கிருமிநாசினி. இதனை அரைத்து கைகளில் பூச நக சுத்தி வராது. கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கவல்லது. புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.
அம்மை நோய் தாக்குதலுக்கு உள்ளாகும்போது சிலருக்கு கண்களுக்குள்ளும் வந்து விடும். அப்போது மருதாணி அரைத்து கண்களின் இமைகளில் வைத்துக் கட்டுவார்கள். இதனால் கண்களில் உள்ள வைரஸ் கிருமிகளின் தாக்கம் குறையும். மருதாணி அரைத்து கால்களின் பாதங்களில் தடவி வர, பித்த வெடிப்பு குணமாகும். சிலர் ஆரம்பக்கட்ட நரைமுடிக்கு தலையில் தேய்த்து வருவதுண்டு.
மருதாணி இலையை வெந்தயம், புளி கலந்த நீரில் அரைத்து தலைமுடியில் பூசி ஒரு மணி நேரம் ஊற வைத்து வாரம் இருமுறை குளித்து வந்தால் இளநரை மறைந்து விடும். உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள், கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும். கால் எரிச்சல் குறைய அப்படியே மருதாணி இலையை அரைத்துப் பூசலாம்.
கரும்படை, வண்ணான் படை, கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்பு வைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 முதல் 15 நாட்கள் பூச வேண்டும். வண்டு கடிக்கும், சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம். மருதாணி இலை சிலவற்றை வாயில் போட்டு மென்று துப்பினால் பற்களின் ஈறு பிரச்னை மற்றும் வாய்ப்புண்கள் சரியாகும். அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம்.
மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவப் பயன் உடையவையாகும். இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவப் பயன்களைக் கொண்டது. மருதாணி பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் நல்ல தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
உடல் சூடு மற்றும் மலச்சிக்கலால் வரும் கட்டிகளை உடைக்க அவரைக்காய் (விதை எடுத்தது), மருதாணி இலை, கிராம்பு சேர்த்து அரைத்து கட்டிகள் மீது பூசி வெள்ளை துணியின் நடுவில் சீழ் வடிய துளையிட்டு கட்டிவர கட்டி உடையும் விரைவில் ஆறிவிடும். மருதாணி இலையை நல்ல எண்ணெய்யில் போட்டு காய்ச்சி வெந்து வரும்போது இறக்கி ஆறியதும் அதை மைபோல் அரைத்து வைத்துக்கொண்டு துணியில் தடவி புண் மீது வைத்து கட்டி வந்தால் ஆறாத புண்கள் கூட ஆறும்.